வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
வாஷிங்டன்: இந்தியாவில் அதிகரிக்கும் மனித உரிமை மீறல்களை அமெரிக்கா உன்னிப்பாக கவனித்து வருவதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளங்கன் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா கடந்த ஒன்றரை மாதங்களாக தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகிறது. இந்த விவகாரத்தில் ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடை விதித்தன. மேலும், ரஷ்யாவுக்கு எதிராக ஐ.நா.,வில் ஓட்டெடுப்பு நடத்தியபோது, இந்தியா நடுநிலை வகித்தது. ரஷ்யா உடன் இந்தியா நீண்ட காலமாக நல்லுறவு பேணுவதால் இந்தியா நடுநிலை வகித்தது. இது அமெரிக்காவுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், நேற்று (ஏப்.,11) பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் காணொலி வாயிலான சந்திப்பு நடைபெற்றது. இரு நாடுகளுக்கு இடையேயான உறவு, சர்வதேச பிரச்னைகள் குறித்து இரு தலைவர்களும் ஆலோசித்தனர்.
இதனைத் தொடர்ந்து மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் மற்றும் பாதுகாப்புச் செயலர் லாயிட் ஆஸ்டின் ஆகியோரை சந்தித்தனர்.
இச்சந்திப்பை தொடர்ந்து நான்கு பேரும் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் பிளிங்கன் கூறியதாவது: இந்தியாவில் அதிகரிக்கும் மனித உரிமை மீறல்களை அமெரிக்கா கண்காணித்து வருகிறது. மனித உரிமை உள்ளிட்ட பொதுவான விவகாரங்களில் நாங்கள் இந்தியா பற்றி தவறாமல் ஆலோசிப்போம். இந்தியாவில் சில அரசுகள், போலீஸ் மற்றும் சிறை அதிகாரிகளால் மனித உரிமை மீறல்கள் அதிகரித்து வருகிறது. அங்கு நடைபெறும் நிகழ்வுகளை நாங்கள் உன்னிப்பாகக் கவனித்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement