இந்தோனேஷியாவில் மாணவர் போராட்டத்தில் வன்முறை| Dinamalar

ஜகார்தா : இந்தோனேஷியாவில் அதிபர் தேர்தல் தள்ளி வைக்கப்பட உள்ளதாக பரவிய வதந்தியை தொடர்ந்து அரசுக்கு எதிராக மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்தது.

தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேஷியாவின் அதிபர் ஜோகோ விடுடுவின் பதவிக் காலம் 2024ல் முடிகிறது. இந்தோனேஷிய அரசியல் சாசன சட்டப்படி ஒருவர் இருமுறைக்கு மேல் அதிபராக நீடிக்க முடியாது. இந்நிலையில் சில அமைச்சர்கள் ஜோகோ விடுடு மூன்றாவது முறையாக அதிபராக நீடிக்க விருப்பம் தெரிவித்தனர். இதையடுத்து அரசியல் சாசனம் திருத்தப்படும் என்ற தகவல் பரவியது. இதற்கு நாடு முழுதும் மாணவர் அமைப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

இதையடுத்து ”வதந்தியை நம்ப வேண்டாம். அதிபர் தேர்தலை தள்ளி வைக்கும் திட்டம் இல்லை” என ஜோகோ விடுடு அமைச்சரவைக் கூட்டத்தில் தெரிவித்தார். எனினும் போராட்டக்காரர்கள் தலைநகர் ஜகர்தாவில் உள்ள பார்லி.யை முற்றுகையிட்டு அரசுக்கு எதிராக கோஷமிட்டனர்.

இதையடுத்து அமைச்சர்கள் மாணவர்களை சந்தித்து ‘தேர்தல் தள்ளி வைக்கப்பட மாட்டாது’ என உறுதி அளித்தனர். இதைத் தொடர்ந்து மாணவர்கள் கலைந்து செல்லத் துவங்கினர். எனினும் மாணவர்கள் அல்லாத நுாற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் பார்லி. கட்டடத்தில் பாதுகாப்புக்கு நின்ற போலீசார் மீது கற்களையும் பாட்டில்களையும் வீசி வன்முறையில் ஈடுபட்டனர்.

இதையடுத்து கூட்டத்தினரை கலைக்க போலீசார் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசினர். அத்துடன் போலீஸ் வாகனம் மூலம் தண்ணீரை பீய்ச்சி அடித்து கூட்டத்தை கலைத்தனர்.இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
ஜகர்தாவைத் தொடர்ந்து மேலும் பல நகரங்களில் அரசுக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் நடந்தது. இதையடுத்து அந்நகரங்களில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டுள்ளது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.