இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் புதிய பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் பதவியேற்ற முதல் நாளிலேயே அரசு அலுவலர்களுக்கு இதுவரை வழங்கப்பட்ட இரண்டு வார விடுமுறைக்கு பதில் இனி ஒரு நாள் தான் என அறிவித்தார். அதுமட்டுமின்றி பிரதமர் அலுவலக வேலை நேரத்தை காலை 8.00மணியாக மாற்றி அறிவித்தார்.
பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதால் இம்ரான் கான் தலைமையிலான அரசுக்கு அளித்து வந்தஆதரவை கூட்டணி கட்சிகள் வாபஸ் பெற்றன. பெரும்பான்மையை இழந்த அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் சார்பில் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப் பட்டது.
ஆனால் நாடாளுமன்றத்தை கலைக்கும் இம்ரான் கான் முடிவை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. இம்ரான் கான் தலைமையிலான அரசுக்கு அளித்து வந்த ஆதரவை கூட்டணி கட்சிகள் வாபஸ் பெற்றதை அடுத்து பாகிஸ்தானில் ஆட்சி கவிழ்ப்பு நடந்து. பின்னர் எதிர்க்கட்சிகளின் கூட்டணி சார்பில் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (என்) கட்சியின் தலைவர் ஷெபாஸ் ஷெரீப் பிரதமர் தேர்வு செய்யப்பட்டார்.
பாகிஸ்தானின் 23-வது பிரதமராக நேற்று பதவியேற்ற ஷெபாஸ் ஷெரீப் முதல் நாளான இன்று ஊழியர்கள் வருவதற்கு முன்னதாகவே காலை 8 மணிக்கு தனது அலுவலகத்தை அடைந்தார். அதேசமயம் பிரதமர் அலுவலக ஊழியர்களில் பெரும்பாலானோர் காலை 10 மணிக்கு வழக்கமான நேரத்தில் வந்தனர். முந்தைய இம்ரான் கான் அரசு வழக்கமாக பின்பற்றிய நேரம் 10.00 மணியாகும்.
இதனைத் தொடர்ந்து பிரதமர் அலுவலக நேரத்தை காலை 10 மணிக்கு பதிலாக காலை 8 மணியாக மாற்றி உடனடியாக அறிவிப்பை வெளியிட்டார் ஷெபாஸ். மேலும், அரசு அலுவலகங்களில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை மட்டும் விடுமுறை அளிக்கப்படும் என்றும் அவர் அறிவித்தார்.
பின்னர் ஊழியர்களிடையே உரையாற்றிய அவர் கூறுகையில் ‘‘நாம் மக்களுக்கு சேவை செய்ய வந்துள்ளோம். எந்த ஒரு நேரத்தையும் வீணடிக்க கூடாது. நாட்டின் பொருளாதாரச் சிக்கலை தீர்க்க அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும். நேர்மை, வெளிப்படைத்தன்மை, விடாமுயற்சி மற்றும் கடின உழைப்பு ஆகியவை தான் நமக்கு வழிகாட்டும் கொள்கைகள். இதில் நாம் தொடர்ந்து நடைபோட்டு நாட்டிற்கு ஏற்பட்டுள்ள சவால்களை தீர்க்க வேண்டும்’’ எனக் கூறினார்.
இதனைத் தொடர்ந்து ஓய்வூதியம் மற்றும் குறைந்தபட்ச ஊதியம் 25,000 ரூபாயாக உயர்த்துவது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்புகளை உடனடியாக அமல்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
பாகிஸ்தான் எதிர்கொள்ளும் கடுமையான பொருளாதார நெருக்கடி குறித்து ஆலோசிக்கவும், நிலைமையை மேம்படுத்த பொருளாதார நிபுணர்களின் வழிகாட்டுதல் கூட்டத்தையும் அவர் இன்று கூட்டினார். இதில் உடனடியாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக பொருளாதார நிபுணர்கள் தங்கள் கருத்துக்களை முன் வைத்தனர்.