லக்னோ: உத்தரபிரதேசத்தில் இயற்கை உபாதை கழிக்கச் சென்ற இளம்பெண் ஒருவரை காரில் கடத்திச் சென்ற கும்பல் கூட்டு பலாத்காரம் செய்தனர். அந்தப் பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உத்தரபிரதேச மாநிலம் சந்த் கபீர் நகர் மாவட்டம் சுரைனா கிராமத்தை சேர்ந்த 23 வயது இளம்பெண் கடந்த 8ம் தேதி இரவு 11 மணியளவில் தனது வீட்டில் இருந்து ஊர் எல்லைப் பகுதியில் இயற்கை உபாதையை கழிப்பதற்காக சென்றார். அப்போது அங்கிருந்து இளைஞர்கள் சிலர், அந்த பெண்ணை மடக்கி அவரை காரில் ஏற்றிக் கொண்டு சென்றனர். அதன்பிறகு அன்றிரவு முழுவதும் அந்த பெண்ணை கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்தனர். பின்னர் காலையில் அந்த பெண்ணை அவரின் வீட்டின் அருகே இறக்கிவிட்டு தப்பினர். மயக்க நிலையில் வீடு திரும்பிய மகளை பார்த்து பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். தொடர்ந்து அந்த பெண்ணை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், அதற்கடுத்த நாள் சிகிச்சை பலனின்றி அந்த பெண் உயிரிழந்தார். இறப்பதற்கு முன்தாக அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும்போது தனது செல்போன் வீடியோவில், ‘பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் என்னை கடுமையாக தாக்கி கடத்திச் சென்றனர். பின்னர் மறைவான இடத்தில் வைத்து கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்தனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று தெரிவித்திருந்தார். இவ்விவகாரம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் தற்போது கூட்டுப் பாலியல் பலாத்காரம், கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘தங்கடா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சுரைனா என்ற இடத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இறப்பதற்கு முன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளம்பெண் வெளியிட்ட வீடியோ பதிவின் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருகிறது. இச்சம்பவத்தில் தொடர்புடைய ஒரு குற்றவாளியை கைது செய்துள்ளோம். மற்ற குற்றவாளிகளை தேடி வருகிறோம்’ என்றார்.