சென்னை:
அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக சுகேஷ் சந்திர சேகர் என்கிற இடைத் தரகருக்கு லஞ்சம் கொடுத்து முயற்சித்ததாக கடந்த 2017-ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் டி.டி.வி. தினகரன் கைது செய்யப்பட்டு சுமார் 2 மாதங்கள் ஜெயிலிலும் இருந்தார். ஆனால் முதல் தகவல் அறிக்கை மற்றும் குற்றப்பத்திரிகையில் அவரது பெயர் இடம்பெறவில்லை.இதனால் ஜாமீனில் விடுதலையானார். அதன்பிறகு டெல்லி போலீசார் இந்த வழக்கை நிறுத்தி வைத்தனர்.
இந்த நிலையில் டெல்லியில் பெண் தொழில் அதிபர் ஒருவரிடம் கோடிக் கணக்கில் மோசடி செய்த வழக்கில் அமலாக்கத்துறையினரிடம் சுகேஷ்சந்திர சேகர் சிக்கினார். அமலாக்கத்துறை விசாரணையில் சுகேஷ் சந்திர சேகர் பல்வேறு மோசடி வழக்குகளில் சம்பந்தப்பட்டிருந்தது தெரிய வந்தது.
அதில் ஒரு பகுதியாக இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்கு டி.டி.வி. தினகரன் லஞ்சம் கொடுத்ததாக கூறப்படுவதையும் விசாரிக்க அமலாக்கத்துறை முடிவு செய்தது.
அதன்படி லஞ்சம் கொடுத்ததை நேரில் பார்த்ததாக டெல்லி மாஜிஸ்திரேட்டிடம் வாக்குமூலம் அளித்திருந்த வக்கீல் கோபிநாத் மற்றும் மோகன்ராஜ் ஆகியோருக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியது.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் கோபிநாத் தற்கொலை செய்துகொண்டார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சுகேஷ்சந்திர சேகரிடம் லஞ்சம் கொடுத்தது தொடர்பாக விசாரிப்பதற்காக நேரில் ஆஜர் ஆகும்படி டி.டி.வி.தினகரனுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருந்தது.
அதன்பேரில் டெல்லியில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் இன்று டி.டி.வி. தினகரன் ஆஜர் ஆனார். அவரிடம் அமலாக்கத்துறை உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதையும் படியுங்கள்… 11 காவல் நிலையங்கள் 274 காவலர் குடியிருப்புகள்- மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்