தங்கவயல் : ”இறைச்சி கடைகளால் சுற்றுப்புற சுகாதாரம் சீர்கெடுகிறது. நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்று நகராட்சி காங்கிரஸ் உறுப்பினர் ரமேஷ் ஜெயின் வலியுறுத்தினார்.தங்கவயல் நகராட்சியில் நேற்று நடந்த நகராட்சி சிறப்பு கூட்டத்தில் நடந்த விவாதம்:நகராட்சி ஆணையர் – நவீன் சந்திரா: நகராட்சியின் எம்.ஜி., மார்க்கெட்டில் இறைச்சி கடைகள் உள்ளன. ஆனால் மார்க்கெட்டுக்கு வெளியேயும் பல இறைச்சி கடைகள் உள்ளன. இதனால் மார்க்கெட்டில் உள்ள கடைகளில் வியாபாரம் நடப்பதில்லை.
எனவே, மார்க்கெட்டுக்கு வெளியே நடத்தப்படும் கடைகளின் உரிமத்தை ரத்து செய்யலாமா?நகராட்சி தலைவர் முனிசாமி: சுரங்க குடியிருப்பு பகுதிகளில் 100 ஆண்டுகளாக இறைச்சி கடைகள் நடத்தப்படுகின்றன. இதை தடுக்க முடியாது; கடைகள், தங்கள் பகுதியில் வேண்டாம் என்போர் தெரிவிக்கலாம். அதன் மீது நடவடிக்கை எடுக்கலாம்.மார்க்., கம்யூ., – தங்கராஜ்: இறைச்சி என்றால் பலவகை உள்ளது. அரசு திட்டத்தில் உள்ளபடி, இறைச்சி விற்பனை குறித்து அரசின் உத்தரவு ஏதாவது வந்துள்ளதா. அதை அமல்படுத்தும் உள்நோக்கம் உள்ளதா?ஆணையர்: மத சம்பந்தமான பிரச்னை பற்றி விவாதம் தேவையில்லை.தலைவர்: அரசு உத்தரவு எதுவும் வரவில்லை. இறைச்சி கடைகளுக்கு உரிமம் வழங்குவது அதிகரிப்பதால் எதிர்ப்பு இருந்தால் தடுத்து நிறுத்தலாம்.காங்., – ரமேஷ் ஜெயின்: நான் இறைச்சி சாப்பிடுவது இல்லை; யாரையும் சாப்பிட வேண்டாம் என கூறவில்லை. ஆனால், சாலையில் ரத்தம் ஓடுகிறது; புழுக்கள் நெ ளிகிறது; சுகாதாரம் இல்லை. கடை நடத்துவோர் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று நகராட்சி உத்தரவிட வேண்டும்.தங்கராஜ்: இறைச்சி கடைகள் போல, மளிகை கடைகளும் அதிகரித்துள்ளன. இவற்றின் உரிமத்தை தடுக்கும் திட்டம் உள்ளதா?ஆணையர்: இறைச்சிகளால் தான் சுகாதார கேடு உள்ளது. அதன் மீது தான்நடவடிக்கை எடுக்க வேண்டும்.ரமேஷ் ஜெயின்: இறைச்சி விற்பனை செய்யும் கடைகளில் கண்ணாடிகள் பொருத்தி, சுகாதார முறைப்படி விற்பனை செய்ய வேண்டும் என்று நகராட்சியில் உத்தரவு உள்ளது. அதை அமல்படுத்த வேண்டும்.ஆணையர்: தங்கவயல் நகராட்சிக்கு மின் உபகரணங்கள் சப்ளை செய்ய ‘கியோனிக்ஸ்’ எனும் அரசு சார்ந்த நிறுவனம் முன் வந்துள்ளது. இதற்கு ஒப்புதல் அளித்தால் மாவட்ட நிர்வாகத்துக்கு தெரிவித்து பெறலாம். இதற்கு நகராட்சி உறுப்பினர்களின் ஒப்புதல் வேண்டும்.ரமேஷ் ஜெயின்: ஏற்கனவே, ஆறு மாதத்திற்கு முன், மின் உபகரணங்கள் வாங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. மேலும் ஒரு ஒப்புதல் தேவையா?தலைவர்: அது, 33 லட்சம் ரூபாய்க்கான டெண்டர். தற்போது ஒரு கோடி ரூபாய்க்கான டெண்டர். எல்.இ.டி., பழுதடைந்தால் சரிப்படுத்தவும், மீட்டர் கருவிகள் உட்பட பிற உபகரணங்கள் வாங்கவும் டெண்டரில் உள்ளது. இதை மாவட்ட நிர்வாக ஒப்புதலுடன் பெற முடியும்.இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.நகராட்சி கூட்டத்தில் ஒரு பெண் உறுப்பினர் கூட பேசவில்லை. ஐந்தாறு உறுப்பினர்கள் மட்டுமே திரும்ப திரும்ப பேசினர்.
Advertisement