இலங்கையில் அந்நிய செலவாணி இருப்பு குறைந்ததால் இறக்குமதி செய்வது தடைபட்டது. இதனால் அத்தியாவசிய பொருட்கள் விலை கடுமையாக உயர்ந்து இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது.
பொருளாதார நெருக்கடியை சமாளிக்க இந்தியாவிடம் இருந்து இலங்கை அரசு கடனுதவி பெற்றது. டீசல், அரிசி ஆகியவற்றை இலங்கைக்கு இந்தியா அனுப்பியது.
இந்த நிலையில் இலங்கையில் அமெரிக்க டாலர் கையிருப்பு குறைந்து வருவது அங்கு பொருளாதார சிக்கலை மேலும் அதிகரித்து இருக்கிறது. கடனாக பெற்ற பணம் வேகமாக தீர்ந்து வருகிறது.
இது குறித்து முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அவர் கூறியதாவது:-
சிங்கள புத்தாண்டுக்கு பின்னர் இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு மேலும் குறைந்து போகும். புத்தாண்டுக்கு பின்னர் டாலர் கையிருப்பு மேலும் வறண்ட நிலைக்கு செல்லும்.
எனவே இலங்கைக்கு இன்று ஆட்சி மாற்றமல்ல, பரந்த பொருளாதார சீர்த்திருத்தங்கள் உள்பட அமைப்புக்களின் மாற்றமே தேவை.
வருகிற மே மாதத்தில் முதல் அல்லது 2-வது வாரம் வரும்போதே இந்திய கடன் வரிகள் மற்றும் பிற உதவிகளை பயன்படுத்தி பொருளாதாரத்தை இயக்க முடியும். எனினும் ஆகஸ்டு வரை பணவீக்கம் அதிகரித்துக் கொண்டே இருக்கும். பணவீக்கம் என்பது காய்ச்சலைப் போன்றது. அது குறைவதற்கு முன் அதிகபட்சமாக அதிகரிக்கும்.
இந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்திற்குள் தனியார் நிறுவனங்களை மூட வேண்டிய நிலை ஏற்படலாம். எனவே பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் திட்டமே தற்போது தேவை. குறைந்தபட்சம் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் நாட்டை மீட்டெடுக்க வேண்டும். இதனடிப்படையில் புதிய சீர்திருத்தங்களை தயாரித்து வருகிறேன்.
இதேவேளை இளைஞர்களால் வழி நடத்தப்பட்ட மக்கள் புதிய ஆரம்பத்தையும் அமைப்புகளின் முழுமையான மாற்றத்தையும் விரும்புகிறார்கள். தற்போது நாடாளுமன்றத்தில் ஆட்சி மாற்றம் குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.
மக்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்காது போனால், தற்போது இடம்பெற்று வரும் போராட்டங்கள் புரட்சியாக மாறும் என்றார்.
இலங்கைக்கான அத்தியாவசிய மருந்துகளை கொள்முதல் செய்வதற்கு அவசர நிதியாக 10 மில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்க உலக வங்கி அனுமதி வழங்கியுள்ளது.
நிதியமைச்சர் அலி சப்ரியுடன் நேற்று நடந்த கலந்துரையாடலின் பின்னர் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு வார காலத்துக்கு எரிவாயு, மருந்து மற்றும் இதர அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு 500 மில்லியன் டாலர்களை வெளியிட உலக வங்கி ஒப்புக் கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே அந்நியச் செலாவணி நெருக்கடியின் காரணமாக உயிர்காக்கும் மருந்துகளை இந்த நாட்டு மக்களுக்கு பெற்றுக் கொள்வதற்கு உதவுமாறு வெளிநாட்டு நன்கொடையாளர்களிடம் மருந்து உற்பத்தி, வழங்கல் மற்றும் ஒழுங்குமுறை அமைச்சகம் கோரிக்கை விடுத்துள்ளது.
273 அத்தியாவசிய மருந்துகளை துரிதமாக கொள்வனவு செய்யுமாறு வெளிவிவகார அமைச்சகம் வெளிநாட்டு தூதரகத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அமைச்சகம் அனுப்பியுள்ள கடிதத்தில்,
உள்ளூர் உற்பத்தியை அதிகபட்ச திறனில் செயல்படுத்தவும், இந்திய கடன் நிவாரணத் திட்டத்தின் கீழ் மருந்துகளை கொள்முதல் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எனினும், வெளிநாட்டு கையிருப்பில் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக, இலங்கையால் உற்பத்தி செய்ய முடியாத மற்றும் இந்திய கடன் திட்டத்தின் கீழ் இறக்குமதி செய்ய முடியாத மருந்துகளை கொள்முதல் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
எனவே, நாட்டுக்குத் தேவையான மருந்துப் பொருட்களை அமெரிக்க டாலர் பரிமாற்றம் அல்லது திரவ உதவியாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு நன்கொடையாளர்களிடம் இருந்து உற்பத்தி, வழங்கல் மற்றும் ஒழுங்குமுறை அலுவல்கள் அமைச்சகம் கேட்டுக்கொள்கிறது.
இலங்கை மத்திய வங்கி நேற்று வெளியிட்ட நாணய மாற்று விகிதங்களில் அமெரிக்க டாலர் ஒன்றின் கொள்முதல் விலை 316.79 ரூபாயாகவும் விற்பனை விலை 327.49 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.
கறுப்பு சந்தை அந்நிய செலாவணி வர்த்தகர்களின் மாற்று விகிதம் ஒரு டாலருக்கு 350-360 ரூபாய்க்கு இடையில் காணப்பட்டதாக தெரிவித்தனர்.
கறுப்பு சந்தையில் சில நாட்களாக டாலர் ஒன்றுக்கு 400-420 ரூபாய் வரையில் வழங்கப்பட்ட நிலையில் நேற்று 350-360 ரூபாய் வரை குறைவடைந்துள்ளது.
கடந்த இரண்டு வாரங்களாக அரசாங்கம் நடைமுறைப்படுத்திய பொருளாதாரக் கொள்கைகளாலும், பணம் அனுப்பும் தொகை அதிகரித்ததாலும் கறுப்பு சந்தையில் அமெரிக்க டாலரின் மதிப்பு குறைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சர்வதேச நாணய நிதியத்திடம் இலங்கை செல்ல தீர்மானித்து உள்ளதால் ரூபாய் வலுவடைய ஆரம்பித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.