கொழும்பு : இலங்கையின் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க, அனைத்துக் கட்சியினரையும் உள்ளடக்கிய இடைக்கால அரசு அமைப்பது தொடர்பாக, அதிபர் கோத்தபய ராஜபக்சே மற்றும் தனித்து செயல்படும் 42 எம்.பி.,க்கள் இடையே நடந்த பேச்சில் சுமுக தீர்வு எட்டப்படவில்லை.
நம் அண்டை நாடான இலங்கையில் அன்னிய செலவாணி தட்டுப்பாடு ஏற்பட்டதை அடுத்து, அந்நாடு கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி உள்ளது.அதிபர் கோத்தபய ராஜபக்சே மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்சே தவிர அமைச்சர்கள் அனைவரும் பதவி விலகினர். நிதித்துறை உட்பட நான்கு துறைகளுக்கு மட்டும் புதிய அமைச்சர்கள் நியமிக்கப்பட்டனர்.இந்நிலையில், ராஜபக்சே குடும்பத்தினர் பதவி விலகக் கோரி, இலங்கையில் நடக்கும் மக்கள் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது.
கடந்த 9ம் தேதி துவங்கிய போராட்டம், மூன்றாவது நாளாக நேற்றும் தொடர்ந்தது. போராட்டம் தீவிரமடைவதை அடுத்து, இலங்கை அரசு நேற்றும் இன்றும் பொது விடுமுறை அறிவித்தது.இதற்கிடையே, இலங்கையில் ஆளும் பொதுஜன பெருமுனா கூட்டணி அரசில் இடம் பெற்று இருந்த 11 கட்சிகளை சேர்ந்த 42 எம்.பி.,க்கள், கூட்டணியில் இருந்து விலகி தனித்து செயல்பட போவதாக சமீபத்தில் அறிவித்தனர். இவர்கள் எதிர்கட்சியுடன் இணைந்து செயல்படவும் மறுத்துவிட்டனர்.
இந்நிலையில், நாட்டின் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க, அனைத்து கட்சியினரையும் உள்ளடக்கிய இடைக்கால அரசு அமைப்பது குறித்து தனித்து செயல்படும் 42 எம்.பி.,களுடன் பேச்சு நடந்த அதிபர் கோத்தபய ராஜபக்சே அழைப்பு விடுத்திருந்தார்.இதையடுத்து, எம்.பி.,க்கள் மற்றும் அதிபர் இடையிலான பேச்சு நேற்று நடந்தது. ஆனால், தீர்வு எட்டப்படாமலேயே பேச்சு முடிவுக்கு வந்தது.
இது குறித்து எம்.பி.,க் கள் குழுவை சேர்ந்த வாசுதேவ் நாணயக்காரா கூறுகையில், ”எங்கள் தரப்பிலான 11 அம்ச கோரிக்கை குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. பேச்சு தொடரும்,” என்றார்.இதற்கிடையே, இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே, நாட்டு மக்களிடம் நேற்று உரையாற்றினார்.
அப்போது அவர் கூறியதாவது: பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்பதற்காக, 24 மணி நேரமும் அரசு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் அதை கைவிட வேண்டும்.நீங்கள் தெருவில் செலவழிக்கும் ஒவ்வொரு நிமிடமும், நம் நாட்டிற்கான அமெரிக்க டாலர் வருவாயில் இழப்பை ஏற்படுத்துகிறது.இவ்வாறு அவர்கூறினார்.
ரூ.2 லட்சத்தை நெருங்கும் 10 கிராம் தங்கம்!
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடியால் அத்தியாவசிய பொருட்களின் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது. இதனால், அடிப்படை தேவைகளை கூட பூர்த்தி செய்து கொள்ள முடியாமல் மக்கள் நெருக்கடிக்கு ஆளாகி உள்ளனர்.இந்நிலையில், இலங்கையில் 10 கிராம் 22 காரட் தங்கத்தின் விலை 1.85 லட்சம் ரூபாயை கடந்துள்ளது. 10 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 2 லட்சம் ரூபாயை நெருங்கியது. இதற்கிடையே, தங்கள் அத்தியாவசிய தேவையை பூர்த்தி செய்ய, தங்களிடம் உள்ளதங்கத்தை மக்கள் விற்க துவங்கி உள்ளனர்.