கொழும்பு: இலங்கையில் அதிபர் கோத்தபய ராஜபக்ச, பிரதமர் மகிந்த ராஜபக்ச ஆகியோர் பதவி விலகக் கோரி தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன. ஆனால் அவர்கள் பதவி விலக மறுத்து வருகின்றனர்.
இந்நிலையில், பிரதமர் மகிந்த ராஜபக்ச நேற்று தொலைக்காட்சியில் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
கரோனா தொற்றுநோயால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து மீள்வதற்கு முன்னதாகவே நாம் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளோம். நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து வருவதை அறிந்திருந்தும், நாம்பொது முடக்கத்தை அறிவிக்க வேண்டியிருந்தது.
நமது நாட்டில் பிரச்சினை இருப்பது உண்மைதான். அதற்காக மக்கள் தெருக்களில் இறங்கி போராடி வருகின்றனர். இதை கைவிட வேண்டும். தெருக்களில் மக்கள் இறங்கி போராடும் ஒவ்வொரு நிமிடமும் நமது நாட்டுக்கான டாலர் வரவு இழந்துகொண்டே இருக்கிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.