மொடக்குறிச்சி
ஈஞ்சம்பள்ளி இலங்கை அகதிகள் மறுவாழ்வு முகாமில் மாநில அளவில் நடந்த பெண்களுக்கான கிளித்தட்டு விளையாட்டு போட்டியில் சிவகங்கை மாவட்ட அணி முதல் பரிசை பெற்றது.
கிளித்தட்டு போட்டி
இலங்கையில் பெண்கள் மட்டுமே கலந்து கொண்டு விளையாடும் புகழ்பெற்ற விளையாட்டான கிளித்தட்டு விளையாட்டு போட்டி ஈரோடு அருகே உள்ள ஈஞ்சம்பள்ளி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் நடைபெற்றது. இதில் ஈரோடு, கரூர், திண்டுக்கல், மதுரை, கோவை, மேட்டுப்பாளையம் தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 14 முகாம்களில் இருந்து அணிகள் கலந்து கொண்டு விளையாடின. இந்த விளையாட்டுப் போட்டியை மொடக்குறிச்சி தாசில்தார் சண்முகசுந்தரம் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
ஒரு அணிக்கு 10 பேர் வீதம் கிளித்தட்டு போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் முதல் இடம் பிடித்த சிவகங்கை மாவட்டம் பாறையூர் லைட்டிங் கேள்ஸ் அணிக்கு ரூ.5 ஆயிரத்து 1 மற்றும் சுழல்கோப்பையும் வழங்கப்பட்டது.
பரிசளிப்பு விழா
இதுதவிர 2-ம் இடம் பிடித்த ஈரோடு மாவட்டம் ஈஞ்சம்பள்ளி ஈரோ லங்கா 7 ஸ்டார் அணிக்கு ரூ.4 ஆயிரத்து 1 மற்றும் சுழல்கோப்பையும், 3-ம் இடம் பிடித்த கரூர் மாவட்டம் குளித்தலை இருமூதிபட்டி ஐ.பி. லங்கா அணிக்கு 3 ஆயிரத்து 1 மற்றும் சுழல் கோப்பையும், 4-ம் இடம் பிடித்த ஈரோடு மாவட்டம் ஈஞ்சம்பள்ளி ஈரோ லங்கா ஏ அணிக்கு 2 ஆயிரத்து 1 மற்றும் சுழல் கோப்பையும் வழங்கப்பட்டது.
மேலும் 3 பேருக்கு ஆட்ட நாயகி விருது வழங்கப்பட்டது. அதில் ஈரோடு லங்கா 7 ஸ்டார் அணியைச் சேர்ந்த சவுந்தர்யாவுக்கு சிறந்த கிளி விடுதல் விருதும், திண்டுக்கல் மாவட்டம் காரையூர் லைட்டிங் கேள்ஸ் அணியைச் சேர்ந்த லத்திசுக்கு சிறந்த கிளி விடுதல் விருதும், சிறப்பாக விளையாடிய குளித்தலை ஐ.பி.அணியைச் சேர்ந்த சாரோவுக்கு விருதும் வழங்கப்பட்டது. பரிசளிப்பு விழாவில் மலையம்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜீவானந்தம் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார்.