கீவ் : உக்ரைனில் ரஷ்ய படையினர் கடந்த ஆறு வாரங்களாக நடத்தி வரும் தாக்குதலில், மரியுபோல் நகரில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் உயிரிழந்துள்ளதாக அந்நகர மேயர் தெரிவித்துள்ளார்.
கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது, கடந்த பிப்., 24ல் ரஷ்ய படையினர் தாக்குதல் நடத்த துவங்கினர். கடந்த ஆறு வாரங்களாக நடந்து வரும் சண்டையில், துறைமுக நகரமான மரியுபோல் பெரும் அழிவுகளை சந்தித்துள்ளது.
இது குறித்து அந்நகர மேயர் வாடிம் பாய்சென்கோ கூறியதாவது:ரஷ்ய படையினர், மரியுபோல் நகரில் மிகப் பெரிய தாக்குதலை நடத்தி உள்ளனர். மனிதாபிமான உதவிகள் செய்யும் அமைப்புகளை நகருக்குள் நுழைய விடாமல் தடுத்து, அங்கு நிகழ்ந்துள்ள பேரழிவை உலகம் அறியாமல் தடுத்து வருகின்றனர்.
தாக்குதலின் தீவிரத்தை பார்க்கும்போது 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்து இருக்ககூடும்.நடமாடும் தகன மேடைகளை மரியுபோல் நகருக்குள் கொண்டு வந்து உடல்களை உடனுக்குடன் எரியூட்டுகின்றனர். சாலை முழுவதும் உடல்கள் சிதறிக்கிடக்கின்றன.
அருகில் உள்ள வணிக வளாகத்தின் குளிரூட்டப்பட்ட கூடத்திலும் உடல்களை குவித்து வைத்துள்ளனர். கீவ் நகரிலும் ரஷ்ய ராணுவ தாக்குதலில் ஏராளமான ராணுவ வாகனங்கள் சேதமடைந்தன. இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement