புதுடில்லி:’உக்ரைனிலிருந்து திரும்பிய மாணவர்கள் தங்கள் கல்வியை தொடர உதவ வேண்டும்’ என, பல்கலைக்கழகங்களுக்கு அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் உத்தரவிட்டு உள்ளது.
கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைனில், இந்தியாவைச் சேர்ந்த ௨௦ ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் மருத்துவம் படித்து வந்தனர். உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததால், அந்நாட்டிலிருந்து இந்திய மாணவர்கள் அனைவரையும், மத்திய அரசு தாயகத்துக்கு திரும்ப அழைத்து வந்தது.
இந்தியாவிலேயே அவர்கள் படிப்பை தொடர்வதற்கான நடவடிக்கைகள் மேற் கொள்ளப் படும் என, பார்லிமென்டில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் உறுதி அளித்தார்.
இந்நிலையில்,அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:உக்ரைனிலிருந்து திரும்பிய மாணவர்கள் தங்கள் கல்வியை தொடர, பல்கலைக்கழகங்கள் உதவ வேண்டும்.காலியாக உள்ள இடங்களில், உக்ரைனிலிருந்து திரும்பிய மாணவர்களை சேர்க்க, பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள், இயக்குனர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உக்ரைனில் எப்போது இயல்பு வாழ்க்கை திரும்பும் என்பது தெரியாத நிலையில், மாணவர்களின் எதிர்காலம் பாதிக்க, நாம் அனுமதிக்கக் கூடாது.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுஉள்ளது.
Advertisement