புதுடில்லி: உக்ரைன் போரால் படிப்பை தொடர முடியாமல் நாடு திரும்பிய மாணவர்களை காலியாக உள்ள இடங்களில் சேர்த்துக்கொள்ள வேண்டுமென அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ) கல்வி நிறுவனங்களை கேட்டுக்கொண்டுள்ளது.
உக்ரைன் – ரஷ்யா இடையேயான போரால் உக்ரைனில் உயர்கல்வி படித்து வந்த இந்திய மாணவர்கள் மத்திய அரசின் உதவியோடு நாடு திரும்பினர். போர் தொடர்ந்து வருவதால், மாணவர்களின் படிப்பை தொடர்வது கேள்விக்குறியாகியுள்ளது. இந்நிலையில், உக்ரைனில் இருந்து திரும்பிய பொறியியல் மாணவர்களை காலியாக உள்ள இடங்களில் சேர்த்துக்கொள்ள வேண்டுமென அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (AICTE) கல்வி நிறுவனங்களை கேட்டுக்கொண்டுள்ளது.
இது குறித்து அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் கல்வி நிறுவனங்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், போர் காரணமாக உக்ரைனில் இருந்து சுமார் 20 ஆயிரம் மருத்துவ மற்றும் தொழில்நுட்ப மாணவர்கள் கல்வி தொடர முடியாமல் தாயகம் திரும்பியுள்ளதாகவும், அவ்வாறு நாடு திரும்பிய மாணவர்களுக்கு பொறியியல் கல்லூரிகளில் காலியாக உள்ள இடங்களை ஒதுக்கி உதவ வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளது. மேலும், உக்ரைனில் எந்த பாடப்பிரிவில், எந்த ஆண்டில் கல்வி பயின்றார்களோ அதையே இங்கேயும் தொடர அனுமதிக்க வேண்டும் எனவும் ஏஐசிடிஇ அறிவுறுத்தியுள்ளது.
Advertisement