புதுடெல்லி: உக்ரைன் நிலவரம் கவலை அளிப்பதாக அமெரிக்க அதிபர் பைடனிடம் பிரதமர் மோடி தெரிவித்தார்.
இந்திய, அமெரிக்க பாதுகாப்பு, வெளியுறவு அமைச்சர்கள் 4-வது முறையாக வாஷிங்டனில் நேற்று சந்தித்துப் பேசினர். அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகனில் அந்த நாட்டு பாதுகாப்பு அமைச்சர் லாயிட் ஆஸ்டனை, இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று மாலை சந்தித்தார். அப்போது பாதுகாப்பு விவகாரங்கள் குறித்து இரு அமைச்சர்களும் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதேபோல அமெரிக்க வெளியுறவு துறை அலுவலகத்தில் அத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கனை இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்து பேசினார். அப்போது சர்வதேச விவகாரங்கள் குறித்து இரு அமைச்சர்களும் விவாதித்தனர்.
இதைத் தொடர்ந்து இந்திய, அமெரிக்க பாதுகாப்பு, வெளியுறவு அமைச்சர்கள் வெள்ளை மாளிகைக்கு சென்றனர். அங்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இந்திய பிரதமர் நரேந்திர மோடி இடையிலான காணொலி சந்திப்பு நடைபெற்றது.
இந்த சந்திப்பின்போது உக்ரைன் விவகாரம் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இவை தவிர கரோனா வைரஸ் தடுப்பு, பருவநிலை மாறுபாடு, சர்வதேச பொருளாதாரம், இந்திய பெருங்கடல்- பசிபிக் கடலில் சுதந்திரமான போக்குவரத்து உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து இரு தலைவர்களும் முக்கிய ஆலோசனை நடத்தினர்.
பிரதமர் நரேந்திர மோடி பேசும்போது, “உக்ரைன் நிலவரம் கவலை அளிக்கிறது. உக்ரைனின் புக்சா நகரில் அப்பாவி மக்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். இதை வன்மையாக கண்டிக்கிறோம். இதுகுறித்து நடுநிலையான விசாரணைநடத்தப்பட வேண்டும். போரை நிறுத்தி அமைதியை ஏற்படுத்துமாறு உக்ரைன், ரஷ்ய அதிபர்களுடன் பலமுறை தொலைபேசியில் பேசியுள்ளேன். இரு நாடுகளின் தலைவர்களும் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். இதன்மூலம் உக்ரைனில் விரைவில் அமைதி திரும்பும். இந்தியாவும் அமெரிக்காவும் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடுகள் ” என்று தெரிவித்தார்.
இந்தியாவுக்கு பாராட்டு
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பேசும்போது, “இந்திய, அமெரிக்கா இடையிலான பாதுகாப்பு, வர்த்தக உறவு வலுவடைந்து வருகிறது. உக்ரைன் மக்களுக்கு இந்தியா நிவாரண உதவிகளை வழங்கி வருவதை வரவேற்கிறேன், பாராட்டுகிறேன். கரோனா வைரஸ் காரணமாக சுகாதாரம், பொருளாதார ரீதியில் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்த பிரச்சினைக்கு ஒன்றுபட்டு தீர்வு காண்பது அவசியம்” என்று தெரிவித்தார்.