நடந்து முடிந்த 5 மாநில சட்டமன்றத் தேர்தலில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட உத்தரப்பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக ஆட்சியைக் கைப்பற்றியது. இத்தேர்தலில் தோல்வியடைந்த அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சி, சட்டமன்றத்துக்குள் எதிர்க்கட்சியாக உள்ளது. இந்த நிலையில் யோகியின் ஆளும் பா.ஜ.க அரசை விமர்சித்து அகிலேஷ் யாதவ் அறிக்கை ஒன்றை நேற்று வெளியிட்டிருந்தார்.
அந்த அறிக்கையில், “உத்தரப்பிரதேசத்தில் பா.ஜ.கவின் இரண்டாவது ஆட்சியில் குற்றவாளிகள் முன்பை விடவும் அச்சமின்றி தைரியமாக உள்ளனர். போலீஸை கண்டால் அவர்களுக்குப் பயமே இல்லை. மாநிலத்தில் தொடர்ச்சியாக வங்கிக் கொள்ளை, லாக்கர் திருட்டு, பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை சம்பவங்கள் எனக் குற்றங்கள் குறையாமல் நடந்து கொண்டே இருக்கின்றன. மாநிலம் முழுவதிலும் அச்ச சூழல் நிலவுகிறது. இதன் காரணமாக மக்கள் அனைவரும் பயத்துடனே வாழ்கின்றனர். மேலும் உத்தரப்பிரதேசத்தில் குற்றச்செயல்களின் புல்லட் ரயிலே ஓடுகிறது. பா.ஜ.க ஆட்சியில் சட்டம் ஒழுங்கு மிகவும் மோசமான நிலையில் உள்ளது. ஆனால் முதல்வரோ இதற்கு மாறான கூற்றுகளைப் பரப்பிவருகிறார். உண்மை என்னவெனில் அரசின் நிர்வாக இயந்திரத்தின் மீது அவருக்கு எந்த கட்டுப்பாடும் இல்லை” என அகிலேஷ் யாதவ் கூறியிருந்தார்.