புதுடெல்லி:
உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரர்கள் பட்டியலில் அதானி குழுமத் தலைவர் கவுதம் அதானி இருக்கிறார். கடந்த ஆண்டில் அதிகமாக சொத்து சேர்த்த வகையில் அவர் மிகப்பெரிய லாபம் அடைந்தார்.
கவுதம் அதானி கடந்த ஆண்டே ஆசிய பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்தார். அவர் ரிலையன்ஸ் குழும நிர்வாக இயக்குனர் மற்றும் தலைவருமான முகேஷ் அம்பானியை பின்னுக்கு தள்ளினார்.
இந்த நிலையில் உலக பணக்காரர்கள் வரிசையில் பட்டியலில் கவுதம் அதானி 6-வது இடத்துக்கு முன்னேறி உள்ளார். போர்ப்ஸ் வெளியிட்ட தகவல்படி அவர் அமெரிக்காவின் சாப்ட்வேர் சக்கரவர்த்தி லேரி எலிசனை முந்தினார்.
கவுதம் அதானியின் சொத்து நேற்று (ஏப்ரல் 11) ஒரே நாளில் ரூ.68 ஆயிரம் கோடி உயர்ந்து உள்ளது. அதன் காரணமாக அவர் உலக பணக்காரர்களின் வரிசையில் 6-வது இடத்தை பிடித்துள்ளார்.
கவுதம் அதானியின் சொத்து தற்போது கூகுள் நிறுவனத்தை சேர்ந்த லேரி பேஜ் மற்றும் செர்ஜிபிரின் ஆகியோரை விட அதிகமாக உள்ளது.
நேற்றைய வர்த்தகம் முடிவில் கவுதம் அதானியின் சொத்து மதிப்பு ரூ.9.27 லட்சம் கோடியாகும். இது முகேஷ்அம்பானியின் சொத்தைவிட ரூ.1.67 லட்சம் கோடி அதிகமாகும். 2 வாரத்தில் இருவருக்கும் இடையே உள்ள சொத்து மதிப்பு வித்தியாசம் அதிகமாகி உள்ளது. கவுதம் அதானியின் 7 நிறுவனத்தின் பங்குகளின் விலையால் அவரது சொத்து மதிப்பும் அதிகரித்து உள்ளது.
அதானி குழுமத்தின் மிகவும் மதிப்புமிக்க நிறுவனமான அதானி கிரீன் எனர்ஜியின் பங்குகள் விலை 20 சதவீதம் அதிகரித்து உள்ளது. இதனால் தான் ஒரே நாளில் அவரது சொத்து மதிப்பு உயர்ந்துள்ளது.