”தேனி அல்லிநகரம் நகராட்சி தலைவியின் ஆடியோ மற்றும் நகராட்சி தலைவர் பதவி விவகாரத்தில் எந்தப் பணமும் என்னிடம் கொடுக்கப்படவில்லை. காங்கிரஸுடன் பேச்சு வார்த்தை முடியும் வரை தேனி அல்லிநகரம் நகராட்சிக்கு ரேணு ப்ரியா தொடர்வார்” என்று விளக்கம் அளித்து தேனியில் தங்கத்தமிழ்செல்வன் பேட்டியளித்துள்ளார்.
தேனி அல்லிநகரம் நகராட்சி தலைவி ரேணுப்பிரியா மற்றும் திமுக கவுன்சிலரான சந்திரகலா ஈஸ்வரி ஆகியோர் பேசிய ஆடியோ சமீபத்தில் வைரலானது. அந்த ஆடியோவில் தேனி அல்லி நகரம் நகராட்சி தலைவர் ரேணுப்பிரியா, கவுன்சிலர் சந்திரகலா ஈஸ்வரியிடம், நடந்து முடிந்த நகர்புற உள்ளாட்சித் தேர்தலுக்காகத்தான் கோடிக்கணக்கில் பணம் செலவு செய்து உள்ளதாகவும் கவுன்சிலர்களுக்கு தரவேண்டிய பணம் அனைத்தையும் மாவட்ட செயலாளரிடம் கொடுத்து வைத்துள்ளதாகவும், பணம் செலவு செய்த பின்பு கணவரை கட்சியில் இருந்து நீக்கி விட்டனர் என்றும் எனது நிலைமை என்னவாகும் என தெரியாமல் இருப்பதாகவும் கூறியுள்ளார்.
இந்த ஆடியோவுக்கு பதிலளித்து தங்கத் தமிழ்ச்செல்வன் பேசும்போது,
“தேனி அல்லி நகரம் நகராட்சி தலைவி ரேணு பிரியா மற்றும் திமுக கவுன்சிலர் சந்திரகலா ஈஸ்வரி ஆகியோரின் ஆடியோ விவகாரத்தில், அவர்கள் பேசியது போல் எந்த பணமும் மாவட்டச் செயலாளரான என்னிடம் கொடுக்கப்படவில்லை. அவர்கள் இருவர் மீதும் கட்சி ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். திமுக சார்பில் காங்கிரஸிற்கு ஒதுக்கப்பட்ட தேனி அல்லி நகரம் நகராட்சி தலைவர் பதவியில் இன்னும் தலைமை கழகத்தின் பேச்சுவார்த்தை தொடர்ந்து நடந்து வருகிறது. அந்த பேச்சுவார்த்தை முடியும் வரையில் தற்போது தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக உறுப்பினரான ரேணு பிரியாவே நகராட்சித் தலைவராக தொடர்வார்” என்று தேனி திமுக வடக்கு மாவட்ட செயலாளர் தங்கத் தமிழ்செல்வன் தேனியில் விளக்கம் அளித்துள்ளார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM