தமது கடமை நேர உத்தியோகபூர்வ தொலைபேசிகளை எந்த நேரத்திலும் தொடர்பு கொள்ள முடியும் வகையில் தயார் நிலையில் இருக்குமாறு இலங்கையில் பொலிஸ் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவை பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரட்ன பிறப்பித்துள்ளதாக தெரியவருகிறது.
அதன்படி அனைத்து பொலிஸ் பொறுப்பதிகாரிகளும், சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளும் (உதவி பொலிஸ் அத்தியட்சர்கள் முதல் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் வரை) தமது கடமை நேர உத்தியோகபூர்வ தொலைபேசிகளை எந்த நேரத்திலும் தொடர்பு கொள்ள முடியுமானவாறு செயலில் வைத்திருக்க வேண்டும் என உத்தவிடப்பட்டுள்ளது.
சில பொலிஸ் பொறுப்பதிகாரிகள் மற்றும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் தமது கடமை நேர உத்தியோகபூர்வ கையடக்கத் தொலைபேசிகளை செயலிழக்கச் செய்து அல்லது சப்தம் கேட்கா வண்ணம் செயற்படுத்தி வைப்பது அவதானிக்கப்பட்டுள்ள நிலையிலேயே பொலிஸ் மா அதிபர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாட்டில் பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் அமைதியை பேணும் வகையில் இவ்வாறு 24 மணிநேரமும் கடமை நேர உத்தியோகபூர்வ கையடக்கத் தொலைபேசிகள் செயலில் இருக்க வேண்டும் என பொலிஸ் மா அதிபரின் உத்தரவில் கூறப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.