கீவ்: உக்ரைனின் கீவ் நகரிலிருந்து ரஷ்யப் படைகள் வெளியேறியுள்ளனர். ஆனால், அவர்களால் ஏற்படுத்தப்பட்ட காயங்களிலிருந்து மீள முடியாமல் வாழ்நாள் முழுவதற்குமான வலியில் உக்ரைனியர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
தலைநகர் கீவ்க்கு மேற்கே 70-கிமீ தொலைவில் உள்ள அமைதியான கிராமப்புறத்தில், 50 வயதான அன்னா ‘பிபிசி’-க்கு அளித்த பேட்டியில் பகிர்ந்தது: (அவரது அடையாளத்தைப் பாதுகாக்க இந்த உரையாடலில் அவரது பெயர் மாற்றப்பட்டுள்ளது.) ”மார்ச் 7-ஆம் தேதி எங்கள் இல்லத்தில் நானும், எனது கணவரும் இருக்கும்போது ரஷ்ய ராணுவ வீரர்கள் நுழைந்தனர். என்னை துப்பாக்கி முனையில் ஒரு வீரர் எங்கள் வீட்டின் அருகிலுள்ள பகுதிக்கு அழைத்துச் சென்றான். அங்கு என் ஆடைகளை களைக்க அவன் ஆணையிட்டான். நான் அவனது பேச்சை கேட்கவில்லை என்றால், என்னைக் கொன்றுவிடுவதாக மிரட்டினான். அவனது மிரட்டலுக்கு பணிந்து நான் என் ஆடையைக் களைத்தேன். என்னை அவன் பாலியல் வன்கொடுமை செய்தான்.
என்னை பாலியல் வன்கொடுமை செய்தவன், செச்சென் ராணுவ வீரன். அவன் ஒல்லியாகவும், இளைய வயதினராகவும் இருந்தார். அவன் பிடியில் நான் இருக்கும்போது மேலும் நான்கு வீரர்கள் உள்ளே நுழைந்தனர். அந்தத் தருணம், நான் மரணித்துவிடுவேன் என்றே நினைத்தேன். ஆனால் அந்த வீரர்கள் அவனை அங்கிருந்து அழைத்துச் சென்றனர். அதன் பிறகு நான் அவனைப் பார்க்கவில்லை. ஒருவகையில் அந்த வீரர்களால் நான் காப்பாற்றப்பட்டேன். அதன்பிறகு நான் வீடு வந்து பார்த்தபோது எனது கணவர் வயிற்றுப் பகுதியில் சுடப்பட்டு இறந்து கிடந்தார்.”
இந்த வலிகளை அன்னா கூறும்போது அவரால் அழுகையை அடக்க முடியவில்லை. அதன் பின், அன்னா தனது வீட்டின் பின்பகுதியில் கணவரை புதைத்த இடத்தை காட்டிக் கதறி அழுதார். அவர் வீட்டுக்கு அருகே 40 வயதுடைய பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, சித்தரவதைக்கு உள்ளாகி கொல்லப்பட்டு கிடந்தார். கீவ் நகரிலும், அதைச் சுற்றியுள்ளப் பகுதிகளிலும் பல பெண்கள், ரஷ்ய வீரர்களால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகியிருக்கிறார்கள்.
இது குறித்து கீவ் நகரின் தலைமை போலீஸ் அதிகாரி ஆண்டிரீ கூறும்போது, ”மார்ச் 9-ஆம் தேதி ஒரு இளம் தம்பதியின் வீட்டில் நுழைந்த ரஷ்ய ரணுவத்தினர், கணவரைக் கொன்று மனைவியை மூன்று முறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அவர்கள் வீட்டையும் எரித்துள்ளனர். இது தொடர்பான வழக்கையையும் விசாரித்து வருகிறோம். இவை எல்லாவற்றையும் சர்வதேச நீதிமன்றத்தில் ஒப்படைப்போம்” என்றார்.
உக்ரைன் மனித உரிமை ஆர்வலர் டெனிசோவா கூறும்போது, “புச்சாவில் உள்ள ஒரு வீட்டின் அடித்தளத்தில் 14 முதல் 24 வயதுடைய சுமார் 25 பெண்கள், ரஷ்ய வீரர்களால் திட்டமிட்ட முறையில் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டனர். அவர்களில் 9 பேர் தற்போது கர்ப்பமாக உள்ளனர். இன்னும் பலர் தங்களுக்கு நடந்தததை கூற முன்வரவில்லை. அவர்களுக்கு முதன்மையாக உளவியல் ஆலோசனை தேவைப்படுகிறது. பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட போர்க்குற்றச்சாட்டுகளுக்காக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை தனிப்பட்ட முறையில் விசாரிக்க, ஐக்கிய நாடுகள் சபையின் மூலம் சிறப்பு நீதிமன்றத்தை அமைக்க உக்ரைன் விரும்புகிறது.
புதினிடம் நான் கேட்க விரும்புவது ஒன்றுதான்… ’இது ஏன் நடக்கிறது?’ ரஷ்ய ராணுவத்தினர் பாலியல் வன்கொடுமைகள் செய்வதாக பெண்கள் கூறுகின்றனர். “எனக்கு புரியவில்லை. நாம் கற்காலத்தில் வாழவில்லையே, ஏன் புதினால் பேச்சுவார்த்தை நடத்த முடியாது ஏன்? உக்ரைனை ஆக்கிரமித்து ஏன் கொலை செய்கிறார்?” என்று கேள்வி எழுப்புகிறார்.
தகவல் உறுதுணை: பிபிசி