சென்னை:
தமிழக சட்டசபையில் இன்று உருமாறிய கொரோனா வைரஸ் குறித்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் (அ.தி.மு.க.) பேசியதாவது:-
வெளிநாடுகளில் உருமாறிய கொரோனா பரவி வரும் நிலையில் ஒமைக்ரான் எக்ஸ் இ பரவுவதை கட்டுப்படுத்த நாம் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜூன் மாதம் இந்த உருமாறிய கொரோனா பரவும் என கணிக்கிறார்கள்.
5 மாநிலங்கள் உஷார் படுத்தப்பட்டு உள்ளன. இந்த சூழ்நிலையில் தமிழ்நாட்டில் இன்னும் 40 லட்சம் பேர் முதல் தவணை தடுப்பூசி போடாமல் உள்ளனர். சுமார் 2 கோடி பேர் 2-வது தவணை தடுப்பூசி போடாமல் உள்ளனர். எனவே தடுப்பூசி போடுவதை தீவிரப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில் அளித்து பேசினார். அவர் கூறியதாவது:-
கொரோனா உருமாற்றம் டெல்டா, டெல்டா பிளஸ், ஒமைக்ரான் என பல பெயர் உருமாற்றத்துடன் 7 வகையான வைரஸ் பரவி உள்ளது. தற்போது எக்ஸ் இ என்ற வைரஸ் ஒமைக்ரானை விட 10 சதவீதம் வேகமாக பரவுகிறது என்கிறார்கள்.
தமிழகத்தை பொறுத்த வரை 2019-ம் ஆண்டு டிசம்பரில் முதல் கொரோனா தொற்று உருவானது. 2020- கேரளா மாநிலம் திருச்சூரில் பரவியது. 2020 மார்ச் 7-ல் தமிழ்நாட்டில் முதல் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. அதன் பிறகு படிப்படியாக பரவியது.
தமிழக முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் மே 7-ந்தேதி பதவி ஏற்றபோது கொரோனா தொற்று ஒருநாள் பாதிப்பு 25 ஆயிரத்து 425 என்கிற வகையில் இருந்தது. முதல்-அமைச்சர் எடுத்த பெரு முயற்சியால் கொரோனா 2-வது அலை முடிவுக்கு வந்தது.
3-வது அலை வரும் என எதிர்பார்த்த நிலையில் அந்த அளவு இல்லை. தற்போது கொரோனா மிக வேகமாக குறைந்து விட்டது. சென்னை வந்து இருந்த தடுப்பூசிக்கான ஆலோசனை குழு தலைவர் அரோராவை சந்தித்தேன்.அவர் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.
இங்கிலாந்தில் ‘எக்ஸ் இ’ கொரோனா 627 பேருக்கு வந்து உள்ளதாகவும், குஜராத், மராட்டியத்திலும் பரவி உள்ளதாக தெரிவித்தார்.
இதை தடுக்க தடுப்பூசிதான் சிறந்த வழி. இதன் காரணமாக சர்வதேச விமான நிலையங்களுக்கு வருபவர்களை பரிசோதிக்க தொடங்கி உள்ளோம். நாளை மறுநாள் நமது முதல்-அமைச்சர் 355 கோடியில் 2,096 அதிதீவிர சிகிச்சை படுக்கை வசதிகளை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் தொடங்கி வைக்க உள்ளார். தடுப்பூசி போடும் பணியை ஒரு இயக்கமாக நடத்தி வருகிறோம்.
உலகம் முழுவதும் புதிய வகை கொரோனா உச்சத்துக்கு வந்தாலும் தமிழகத்தில் கொரோனா பரவாமல் தடுக்க தடுப்பூசி இயக்கத்தை மக்கள் ஒத்துழைப்புடன் தீவிரமாக செயல்படுத்தி வருகிறோம்.
இந்த அரசு எந்த வைரஸ் வந்தாலும் தடுக்க அனைத்து முன் ஏற்பாடுகளையும் செய்து தயாராக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படியுங்கள்… இலங்கையில் டாலர் கையிருப்பு குறைவதால் மேலும் சிக்கல்