ஸ்ரீலங்கா: கோத்தபய குடும்பத்தினரின் அவலமான மற்றும் எதேச்சதிகார ஆட்சியால் இலங்கை என்று கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. தமிழர்களை கொன்றுகுவிக்க சீனா உள்பட பல்வேறு நாடுகளில் கடன்வாங்கிய ராஜபக்ச குடும்ப ஆட்சி, இன்று வாங்கிய கடனுக்கு வட்டியைக்கூட கட்ட முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டு உள்ளது. இதனால் இலங்கை திவாலாகும் நிலையில் உள்ளது.
கொரோனா பெருந்தொற்று காரணமாக உலக நாடுகள் கடுமையான பொருளாதார இழப்பை சந்தித்து உள்ளன. இதில் அண்டை நாடான இலங்கை கடுமையாக பாதிக்கப்பட்டு, இன்று நெருக்கடியான சூழலுக்கு தள்ளப்பட்டு உள்ளது. உணவுப்பொருள் கிடைக்கவில்லை, எரிபொருள் கிடைக்கவில்லை, அன்றாட தேவைக்கான அத்தியாவசிய பொருட்களின் விலை வரலாறு காணாத விலையேற்றம், அந்நியச் செலாவணி பற்றாக்குறையை மிகவும் கடுமையாக எதிர்கொண்டுள்ளது இலங்கை. உணவு மற்றும் எரிபொருள் நெருக்கடியை உருவாக்கியுள்ளது. நாட்டில் மின்வெட்டு தொடர்கிறது. அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாடு இலங்கை நட்பு நாடுகளின் உதவியை நாட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. பலர் அண்டை நாடுகளுக்கு அகதிகளாக செல்லும் நிலை உருவாக்கி உள்ளது.
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு முக்கிய காரணம் கோத்தபய, ராஜகபக்சே குடும்பத்தினர்தான் என பொதுமக்கள் குற்றம் சாட்டி, அவர்களின் வீடுகளை முற்றுகையிட்டு போராடடம் நடத்தி வருகின்றனர். தலைநகர் கொழும்பில் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் நடத்தி வரும் தொடர் போராட்டங்களில் இன்றும் ஆயிரக்கணக்கானோர் திரண்டு ஆளும் அரசுக்கு எதிராக முழக்கமிட்டு வருகின்றனர்.
”கோட்டாபய கோ ஹோம்” என கோஷங்களை எழுப்பியவாறு நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மக்கள் ஒன்று கூடி போராடி வருகின்றனர். இதையொட்டி, இலங்கையில் மிக முக்கியமான அனைத்து இடங்களிலும் ராணுவம் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. எரிபொருள் நிரப்பு நிலையங்கள், மிக முக்கிய நிறுவனங்கள் உள்ளிட்ட பல பகுதிகளில் ஆயுதம் ஏந்திய ராணுவம் நிலை நிறுத்தப்பட்டுள்ளதுடன், மிக முக்கிய பொறுப்புகளுக்கு ராணுவ அதிகாரிகளும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறான ஒரு சூழ்நிலையில், இலங்கையில் ராணுவ ஆட்சி கொண்டு வரப்படுவதற்கான சாத்தயம் உள்ளதாக பலரும் கூறி வருகின்ற நிலையிலேயே, அவசரகால சட்டம் அமல்படுத்தப்படுகின்றது.
இந்த தீவிரமான பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வைக் காண்பதற்கு முதலில் நிலையான அரசாங்கத்தை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென உலக நாடுகள், ஐநா போன்றவை கோரிக்கை வைத்துள்ளது. பொதுமக்கள் அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சே பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், அவர்கள் பதவி விலக மறுத்து வருகின்றனர்.
இந்த சூழலில் இலங்கைக்கு கடன்கொடுத்த சீனா உள்பட சர்வதேச நிதியங்கள், உலக வங்கி போன்றவை கடனை திருப்பிச்செலுத்த இலங்கையை வலியுறுத்தி வருகின்றன. ஆனால், கடனுக்கான வட்டியைக்கூட செலுத்த முடியாத நிலையில் இலங்கை தத்தளித்துக்கொண்டிருக்கிறது.
இந்த நிலையில், இலங்கையின் மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்கே, இலங்கை சாதாரண கடன் சேவையை இடைநிறுத்துவதுடன், கடனை மறு சீரமைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தத் தொடங்கும் என தெரிவித்துள்ளார். ஏற்கனவே வாங்கப்பட்டுள்ள கடன்களுக்கு வட்டி கட்டுவதையும் நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளார். இதனால், இலங்கை திவாலாகும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு காரணம் என்ன?
இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு கொரோனா மட்டும் காரணமாக, ஆட்சியாளர்களின் தமிழின வெறுப்பும் காரணம் என்று சிங்களர்களே குற்றம் சாட்டி உள்ளனர். இலங்கையில் கடந்த 30 ஆண்டுகளாக தொடர்ந்த உள்நாட்டுப் போரை முடிவுக்கு கொண்டு வர அப்போது அதிபராக இருந்த மஹிந்த ராஜபசேதான் காரணம் என்று குற்ம் சாட்டப்படுகிறது.
2005 முதல் 2015ஆம் ஆண்டு வரை இலங்கை அதிபராக பதவி வகித்த ராஜபக்சே, தமிழர்களையும், தமிழினத்தையும் வேரறுக்க எண்ணி, ராணுவத்துக்கு தேவையான உபகரணங்கள், வெடிபொருட்களை வாங்கிக்குவிக்க உலக நாடுகளில் கடன் கேட்டு கையேந்திரனார். அதன் தாக்கம் தற்போது இலங்கையை திவாலாக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது.
இலங்கையின் கடன் கோரிக்கையை முதலில் உறுதி செய்தது சீனா. ஆனால், அதற்கு பிரதிவுபகாரமாக இலங்கையின் துறைமுகம் ஒன்றைஎழுதி வாங்கிக்கொண்டது. அதாவது, கடனை குறிப்பிட்ட காலத்திற்குள் கட்டவில்லை என்றால், இலங்கையின், அம்பாந்தோட்டா துறைமுகம் சீனாவின் கைக்குள் சென்றுவிடும் என்ற வகையில் ஒப்பந்தம் போடப்பட்டது. இது நிதர்சனத்திற்கு ஒவ்வாத திட்டம் என்று கூறினாலும், சீனாவின் விருப்பத்திற்கு ‘சரி’ என்ற பதிலையே தெரிவித்தார் ராஜபக்சே. அவரது ஆட்சிக்காலத்தில், சீனாவிடம் இருந்து இலங்கை பெற்ற கடன்தொகை துரிதமாக அதிகரித்தது.
அம்பாந்தோட்டா துறைமுகத்தை ஒட்டியுள்ள கடல் மார்க்கம், உலகிலேயே அதிக பரபரப்பானது; பல்லாயிரக்கணக்கான கப்பல்கள் இந்த வழியில் பயணிக்கின்றன, அதேசமயம் 2012 ஆம் ஆண்டில், அம்பாந்தோட்டாவில் இருந்து 34 கப்பல்கள் மட்டுமே அந்த வழியில் சென்றன, இறுதியில் அந்த துறைமுகம் இப்போது சீனாவிற்கு சொந்தமாகிவிட்டது.”
2015 ல், ராஜபக்ஷ இலங்கையின் ஆட்சி அதிகாரத்திலிருந்து விலக்கப்பட்டாலும், பதவியேற்ற புதிய அரசு, வாங்கிய கடனை செலுத்துவதற்கு திணறுகிறது. கடனை திருப்ப செலுத்த முடியாமல் போனதால், பல மாதங்கள் தொடர்ந்து நடைபெற்ற பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர் இலங்கை, அம்பந்தோட்டா துறைமுகத்தையும், 15,000 ஏக்கர் நிலத்தையும் சீனாவிடம் ஒப்படைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
சீனாவுக்கு இலங்கை ஒப்படைக்கப்பட்ட பகுதி, இந்தியாவிலிருந்து 100 மைல் தொலைவில் உள்ளது என்பது, இந்தியாவிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் முக்கியமான அம்சமாக கருதப்படுகிறது. இந்த நிலையில், இலங்கை மீண்டும் சீனாவில் இருந்து கடன் வாங்கியது. , அதற்கான கடனை 2019ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே இந்த கடனை இலங்கை திருப்பிச் செலுத்தத் தொடங்கவேண்டும். ஆனால் சரியான முறையில் கடனை செலுத்தாததால், இன்று தனது துறைமுகத்தை இழந்துள்ளதுடன், கடுமையான நெருக்கடிக்கும் உள்ளாகி உள்ளது.
இலங்கையின் மொத்த வெளிநாட்டு கடன் 2017ம் ஆண்டு 55 பில்லியன் அமெரிக்க டாலர் என்ற அளவில் உள்ளது. நிக்கேய் ஆசிய மதிப்பீட்டு அறிக்கையின்படி, 1.25 பில்லியன் டாலர்களை சீனாவிடம் இருந்து புதிய கடனாக இலங்கை பெற்றது. இலங்கையின் 17 பில்லியன் வெளிநாட்டுக் கடன்களை, அது 2019 முதல் 2023க்கு இடையிலான காலகட்டத்தில் திருப்பிச் செலுத்தவேண்டிய கட்டாயத்தில் உள்ளது. ஆசிய மேம்பாட்டு வங்கி, உலக வங்கி, சீனா, ஜப்பான், இந்தியா உட்பட பல்வேறு இடங்களில் இருந்து இந்த கடன்கள் பெறப்பட்டுள்ளது. மொத்தமாக 55 பில்லியன் டாலர் அளவில் வெளிநாடுகளில் இருந்து இலங்கை கடன் பெற்றுள்ளது. அதில், சீனா 10 சதவிகிதம், ஜப்பான் 12 சதவிகிதம், ஆசிய மேம்பாட்டு வங்கி 14 சதவிகிதம், உலக வங்கி 11 சதவிகிதம் என்ற அளவில் இலங்கைக்கு கடன் கொடுத்திருக்கின்றன.
2009ல் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தபிறகு, ராஜபக்ஷ மற்றும் அவரது குடும்பத்தினர், இலங்கையின் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றினார்கள். ராஜபக்ஷவின் மூன்று சகோதரர்கள், இலங்கை அமைச்சரவையின் மீது அதீதமான செல்வாக்கை கொண்டிருந்தனர். அந்த சமயத்தில், சீன அரசுக்கும், ராஜபக்சேவுக்கும் இடையிலான உறவு மேலும் நெருக்கமானது. இதனால் இலங்கை மீதான கடன் மேலும் மேலும் அதிகரித்து வந்தது.
வாங்கிய கடனின் ஒரு பகுதியை வரும் ஜூலை மாதத்துக்குள் வட்டியுடன் திருப்பிச் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ள இலங்கைக்கு எந்த சலுகையும் வழங்க முடியாது என சீனா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இலங்கையின் இந்த பொருளாதார சீரழிவுக்கு அந்நாடு வரம்பற்று வாங்கிய கடனே காரணம் என கூறப்படுகிறது.
குறிப்பாக உள்கட்டமைப்பு திட்டங்களுக்காக சீனா வங்கிகளிடம் அதிகமான கடன் பெற்றது முக்கிய காரணமாகும். எந்த வருவாயும் வராத திட்டங்களுக்கு தொடர்ந்து வாங்கிய கடன் இலங்கை சுதந்திரமடைந்தது முதல் காணாத பெரும் நெருக்கடியில் தள்ளியுள்ளது. இலங்கையை பொறுத்தவரையில் இந்த ஆண்டு 4 பில்லியன் டாலர் மதிப்புடைய கடனை திருப்பிச் செலுத்த வேண்டியுள்ளது.
ஏற்கனவே தங்கப் பத்திரங்கள் மூலம் 11.8 டாலர்கள் பில்லியன் மதிப்புள்ள கடனை இலங்கை வாங்கிக் குவித்துள்ளது.
ஆசிய வளர்ச்சி வங்கியில் 14.3 சதவீத பங்குடன் அதிக கடன் பெற்ற நாடுகளின் பட்டியலில் இலங்கை இரண்டாவது இடத்தில் உள்ளது
. சீனாவிடம் அதிகமாக கடன் பெற்ற நாடுகளின் பட்டியலில் இலங்கை நான்காவது இடத்தில் உள்ளது.
சீனாவிற்கு இலங்கை செலுத்த வேண்டிய மொத்தக் கடன் 8 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளது. இது இலங்கையின் மொத்த வெளிநாட்டுக் கடனான 45 பில்லியன் அமெரிக்க டாலர்களில் கிட்டத்தட்ட ஆறில் ஒரு பங்காகும்.
சீனாவிற்கு மட்டும் 5 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு மேல் கடன்பட்டுள்ளது. இதில் 5 பில்லியன் அளவுக்கு நேரடியாக டாலர்களாக பெற்றத் தொகையாகும்.
சீனாவிற்கு இலங்கை உடனடியாக திருப்பிச் செலுத்த வேண்டிய தொகை சுமார் 400 முதல் 500 மில்லியன் டாலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.
மீதமுள்ள கடன் இந்தியா போன்ற நாடுகளுக்கும் உலக வங்கி மற்றும் ஐக்கிய நாடு உள்ளிட்ட சர்வதேச நிறுவனங்களுக்கும் இலங்கை செலுத்த வேண்டும்.
இந்தியாவை பொறுத்தவரையில் இலங்கைக்கு ஜனவரி முதல் 400 மில்லியன் அமெரிக்க டாலர் நாணய பரிமாற்றம் மற்றும் 500 மில்லியன் அமெரிக்க டாலரில் கடன் வழங்கியுள்ளது.
இதுமட்டுமின்றி 2.4 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவில் உதவி வழங்கவும் உறுதியளித்தள்ளது.
கடந்த மாதம், உணவு, மருந்துகள் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களை வழங்க இந்தியாவுடன் 1 பில்லியன் அமெரிக்க டாலர் கடனாக பெற இலங்கை ஒப்பந்தம் செய்துள்ளது.
இந்த நிலையில் ஒப்பந்தப்படி ஜூலை மாதத்துக்குள் இலங்கை வட்டியுடன் திருப்பிச் செலுத்த வேண்டிய கடன் தொகை பெரிய அளவில் உள்ளது.
இந்த தொகை இலங்கையின் கழுத்தை நெறிக்கும் அளவுக்கு உயர்ந்து விட்டதாக அந்நாட்டின் மத்திய வங்கி ஏற்கெனவே கவலை தெரிவித்துள்ளது. குறிப்பாக சீனாவிடம் பெற்ற கடனுக்கான வட்டியுடன் ஜூலையில் ஒரு பகுதியை செலுத்த வேண்டும்.
ஜூலை மாதத்தில் முதிர்ச்சியடையும் 1 பில்லியன் டாலர் தங்கப்பத்திரம் உட்பட இந்த ஆண்டு அதன் டாலர் மதிப்பிலான கடன் திருப்பிச் செலுத்த வேண்டிய தொகை 6 பில்லியன் டாலர்கள் அளவுக்கு உள்ளது. இதையும் கூட செலுத்தும் நிலையில் இலங்கை தற்போது இல்லை என்று ரேட்டிங் ஏஜென்சிகள் மற்றும் பொருளாதார வல்லுநர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
கடனை திருப்பிச் செலுத்துவதில் எந்த சலுகையும் வழங்க முடியாது என இலங்கைக்கு சீனா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. கடனை செலுத்த கூடுதல் அவகாசம் வேண்டும் எனவும், வட்டி உட்பட சில தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற இலங்கையின் கோரிக்கையை சீனா பதிலளிக்க மறுத்துள்ளதாக கூறப்படுகிறது. அதேசமயம் வட்டி உட்பட உடனடி தேவைக்கு 1.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் கடன் வழங்க தயாராக இருப்பதாக சீனா கூறியுள்ளது.
லாபமற்ற உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு நிதியளிப்பதற்காக சீனாவிடம் இருந்து பொறுப்பற்ற முறையில் கடன் வாங்கியதன் இறுதி விளைவுதான் இலங்கையின் இந்த நிலைக்கு காரணம்.
இலங்கையின் நிதி நெருக்கடியானது பல காரணங்களினால் ஏற்பட்டுள்ள போதிலும், அது இலங்கையின் பொருளாதாரம் மற்றும் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கை உரிய முறையில் மேற்கொள்ளாததே முக்கிய காரணம். இதற்கு ராஜபக்சே குடும்பத்தினர்தான் காரணம் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இருந்தாலும் தற்போதைய சூழலை கருத்தில்கொண்டு இலங்கைக்கு இந்தியாதான் கைகொடுத்து உதவி வருகிறது.
இலங்கை அரசின் வெளிநாட்டுக் கடன்களின் அளவு வெகுவாக அதிகரித்துள்ள நிலையில் அந்நிய செலாவணி பற்றாக் குறையினால் கடன்களை திருப்பிச் செலுத்த முடியாத திவால் நிலையை எட்டியுள்ளது என அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இலங்கையின் பொருளாதாரத்தில் மிக முக்கிய பங்கு வகித்த சுற்றுலாத்துறை கோவிட் தொற்றினால் முடங்கி போனதும் இதற்கொரு காரணம் இதனால் அந்நியச் செலாவணியின் வருகையும் கூட முடங்கிப் போனது, அதேபோன்று வெளிநாட்டு நேரடி முதலீடுகளும் ஸ்தம்பிதமடைந்திருக்கின்றன வெளிநாடுகளிலிருந்து புதிய கடன்களை பெற்றுக் கொள்வதில் சிக்கல் ஏற்பட்டிருக்கின்றது. ஏற்கனவே பெற்றுக்கொண்ட கடன்களை மீள்செலுத்துவதிலும் டாலர் பற்றாக்குறை காரணமாக நெருக்கடி ஏற்பட்டுள்ளது
இந்த நிலையில், இலங்கை, தனது வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்தவில்லை என அறிவித்துள்ளது. கடன் சேவையை இடைக்காலத்திற்கு நிறுத்தி வைப்பதாக அரசாங்கம் கூறுகிறது. பொருளாதார மீட்சி திட்டத்தை வடிவமைப்பதில் உதவி மற்றும் அவசர நிதி உதவிக்காக இலங்கை அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தை அணுகியுள்ளது. இதை, இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க உறுதிப்படுத்தி உள்ளார். இலங்கை சாதாரண கடன் சேவையை இடை நிறுத்துவதுடன், கடனை மறுசீரமைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தத் தொடங்கும் என தெரிவித்துள்ளார். கடன் தொகையை கட்ட முடியாமல் திணறும் இலங்கை இன்று வாங்கி கடனுக்கான வட்டியையும் கட்ட முடியாமல் திணறுகிறது. இதனால் இலங்கை திவாலாகும் நிலையை நோக்கி பயணித்துக்கொண்டிருக்கிறது.