காஷ்மீர் பிரச்சினையை எழுப்பிய பாக்.,பிரதமர்: அமைதியை விரும்புவதாக வாழ்த்துச் செய்தி அனுப்பிய இந்தியப் பிரதமர் மோடி

புதுடெல்லி: பாகிஸ்தானின் 23வது பிரதமராகப் பதவியேற்றுக் கொண்டுள்ளார் ஷெபாஸ் ஷெரீப். அவர் தனது முதல் உரையில் காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு காணாமல் அமைதியை விவாதிக்க முடியாது தனது முதல் பேச்சில் கூறியிருந்த நிலையில், அமைதியை நிலைநாட்டாமல் வளர்ச்சி காண முடியாது என்று வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.

மோடி தனது ட்விட்டரில், “பாகிஸ்தானின் பிரதமராக தேர்வு செய்யப்பட்ட மியான் முகமது ஷெபாஸ் ஷெரீபுக்கு எனது வாழ்த்துகள். பாகிஸ்தான் பயங்கரவாதம் இல்லாத பிராந்தியமாகவும் அமைதியும், ஸ்திரத்தன்மையும் நிலைக்கும் பகுதியாக இருக்க வேண்டும் என்று இந்தியா விரும்புகிறது. அமைதியிருந்தால் வளர்ச்சிக்கான சவால்களை எதிர்கொண்டு மக்களின் நலனையும் வளத்தையும் உறுதி செய்யலாம்” என்று தெரிவித்துள்ளார்.

— Narendra Modi (@narendramodi) April 11, 2022

இம்ரான் கான் தலைமையிலான அரசுக்கு அளித்து வந்த ஆதரவை கூட்டணி கட்சிகள் வாபஸ் பெற்றதை அடுத்து பாகிஸ்தானில் ஆட்சி கவிழ்ப்பு நடந்து, அந்நாட்டின் புதிய பிரதமராக பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (என்) கட்சியின் தலைவர் ஷெபாஸ் ஷெரீப் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

பிரதமராக தேர்வு செய்யப்பட்ட பின் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பேசிய ஷெபாஸ் ஷெரீப், “இந்தியாவுடன் நல்ல உறவையே விரும்புகிறோம். ஆனால், காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு காணாமல் அமைதியை விவாதிக்க முடியாது. காஷ்மீரில் 370 வது பிரிவை ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில், காஷ்மீர் சகோதர சகோதரிகளுக்கு பாகிஸ்தான் தனது தார்மீக ஆதரவை வழங்கும். காஷ்மீர் மக்களின் விருப்பத்துக்கேற்றவாறு காஷ்மீர் பிரச்சினையை முடிவு செய்வோம். இருநாடுகள் உடனான மோதலை முடிவுக்கு கொண்டுவந்து வேலைவாய்ப்பை ஏற்படுத்துவோம், மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துவோம்” என்று பேசியிருந்தார். காஷ்மீர் பிரச்சினையில் இம்ரான் கான் துரோகம் இழைத்துவிட்டதாகவும் குற்றஞ்சாட்டினார்.

இந்நிலையில் அமைதியை உறுதி செய்யாமல் வளர்ச்சி காண முடியாது என்று தனது வாழ்த்துச் செய்தியில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.