உலக அளவில் உளவியல் ஆலோசகர்களுக்கான கலந்துரையாடல் மற்றும் புரிந்துணர்வு கருத்தரங்கு ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டு பல்வேறு தலைப்புகளில் உரையாடல் நிகழ்த்தப்பட்டிருக்கிறது. கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெற்ற இக்கருத்தரங்கை ‘Indian Academy of Proessional Supervisors’ என்ற அமைப்பு ஒருங்கிணைத்தது. இந்த அமைப்பின் நிறுவனரும் தலைவருமான உளவியல் ஆலோசகர் வாசுகி மதிவாணன் இக்கருத்தரங்கின் நோக்கம் குறித்துக் கூறினார்…
“உலக அளவில் மன அழுத்தம், மனச்சோர்வு போன்ற மனநலம் சார்ந்த பிரச்னைகளுக்கு ஆளாவது பொதுவான பிரச்னையாக இருக்கிறது. அதுவும் குறிப்பாக கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு அது சார்ந்த மனநல பிரச்னைகளால் உளவியல் ஆலோசகர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இச்சூழலில், பல்வேறு நாடுகளில் உள்ள உளவியல் ஆலோசகர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் மற்றும் அவற்றை அவர்கள் கையாளும் விதத்தினைப் பகிர்ந்து கொள்வதற்காகவே இக்கருத்தரங்கு நடத்தப்பட்டது.
ஒருவரிடமிருந்து ஒருவர் கற்றுக்கொள்ளும் நோக்கத்தில் நடத்தப்பட்ட இக்கருத்தரங்கில் பல்வேறு தலைப்புகளில் உரை நிகழ்த்தப்பட்டு கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது. ஆன்லைன் மூலம் எங்கள் அமைப்பு சார்பில் மேற்கொள்ளப்பட்ட இக்கருத்தரங்கில் ஆசியா, அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா ஆகிய கண்டங்களில் உள்ள பல்வேறு நாடுகளைச் சேர்ந்த உளவியல் ஆலோசகர்கள் கலந்து கொண்டனர்.
இந்தியாவில் உளவியல் ஆலோசகர்களை ஒழுங்குமுறைப்படுத்துவதற்கான அமைப்பு இல்லை. ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் உளவியல் ஆலோசர்களுக்கான கமிட்டியில் பதிவு செய்தால்தான் ஆலோசகராக முடியும். ஆனால், இந்தியாவில் ஏதாவது ஒரு படிப்பைப் படித்துவிட்டு தன் சொந்த அனுபவத்திலிருந்து உளவியல் ஆலோசனை வழங்குபவர்கள்கூட உளவியல் ஆலோசகர்களாக இருக்கிறார்கள். இதை எப்படி முறைப்படுத்துவது என்பது குறித்து பேசப்பட்டது.
இக்கருத்தரங்கில் 24 பேர் பல நாடுகளில் இருந்து வந்து பேசினார்கள். 27 பேர் உளவியல் பிரச்னைகள் தொடர்புடைய தங்களது ஆய்வறிக்கையை சமர்ப்பித்தனர். உளவியல் ஆலோசகர்களை எப்படிக் கண்காணிக்கலாம் என்பது குறித்த கூட்டுக் கலந்துரையாடல் நடத்தப்பட்டது. ஆஸ்திரேலியா, நேபாளம், பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த உளவியல் ஆலோசகர்களோடு இந்தியா சார்பாக நான் இக்கலந்துரையாடலில் கலந்து கொண்டு பேசினேன்” என்றவரிடம் கருத்தரங்கில் பேசப்பட்ட சில தலைப்புகள் குறித்துக் கேட்டோம்…
“கொரோனா தொற்றுக்குப் பிறகு பொதுமக்கள் எதிர்கொண்டுள்ள உளவியல் பிரச்னைகள், LGBTQ குறித்த உளவியல் ஆய்வறிக்கை, பாதிரியார்கள் தரும் பாவ மன்னிப்புக்கும் உளவியல் ஆலோசனைக்கும் உள்ள வேறுபாடு, என பல்வேறு தலைப்புகளில் ஆய்வறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டன. பெண்களின் மனநலம் எப்படி இருக்கிறது என இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த உளவியல் ஆலோசகர்கள் பேசினர்.
உலகிலேயே முதல் பெண் பிரதமராக சிறிமாவோ பண்டாரநாயகாவைத் தேர்ந்தெடுத்த இலங்கையில் இன்றைய பெண்கள் நிலை குறித்து பேசப்பட்டது. தாலிபன் ஆட்சியில் ஆப்கானிஸ்தானில் பெண்கள் நிலை குறித்தும் பேசப்பட்டது. ‘media and mental health’ என்ற தலைப்பில் மன நலத்துக்கு ஊடகங்கள் ஆற்றும் பங்கு குறித்தும் பேசப்பட்டது. இது போன்ற ஆக்கபூர்வமான உரையாடல்கள் நடந்தன” என்கிறார்.
மேலும் அவர், “இக்கருத்தரங்கை மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியம் அவர்கள் கலந்து கொண்டு தொடங்கிவைப்பதாக இருந்தது. சட்டமன்ற கூட்டத்தொடர் நடந்து வருவதால் அவரால் கலந்து கொள்ள முடியவில்லை. இருந்தும், எங்களது முயற்சியைப் பாராட்டி வாழ்த்து மடல் அனுப்பியிருந்தார். தமிழக அரசு மனநலம் சார்ந்த ஆக்கபூர்வமான முன்னெடுப்புகளை எப்போதும் மேற்கொள்ளும் என்று அமைச்சர் தெரிவித்திருந்தார்” என்கிறார் வாசுகி மதிவாணன்.