அதிமுக பொதுச் செயலாளர் பதவியிலிருந்து சசிகலாவை நீக்கியது செல்லும் என சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த தீர்ப்பை கொண்டாடும் விதத்தில் அதிமுக அலுவலகத்தில் தொண்டர்கள் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.
இதையடுத்து, அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் ஆகியோர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனை கூட்டத்தில் எஸ் பி வேலுமணி, ராகுல் இந்திரா, சிவி சண்முகம், ஜெயக்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, சசிகலா அரசியலில் இருந்து விலகி கொள்வதுதான் அவர்களுக்கு நல்லது. அதிமுகவை கைப்பற்றும் முயற்சி சசிகலாவிற்கு தொடர்ந்து தோல்வி கொடுத்து வருகிறது.
சசிகலாவிற்கு அதிமுகவும் எந்த தொடர்பும் இல்லை. அதிமுகவினர் ஒற்றுமையாக உள்ளனர். சசிகலாவை நீக்கியது செல்லும் என்ற தீர்ப்பை இன்று தமிழகத்தில் உள்ள அதிமுக தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்கின்றனர். யாதும் ஊரே யாவரும் கேளிர் என பிரதமரே சொல்லியுள்ளார். அந்த வகையில் இந்தியாவின் இணைப்பு மொழியாக தமிழ் வந்தால் அதை விட மகிழ்ச்சி வேறு எதுவுமில்லை. இணைப்பு மொழியாக தமிழ் வரவேண்டும் என தெரிவித்துள்ளார்.