தமிழக சட்டப்பேரவை கூட்டத்தில் பங்கேற்ற பின், வெளியே வந்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியிடம் ஊடகங்கள் சசிகலா பற்றி கேள்வி எழுப்பியபோது, பதற்றத்தில் அங்கே நிறுத்தி வைத்திருந்த உதயநிதி காரில் ஏற முயன்ற வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
தமிழ்நாடு சட்டப் பேரவையில் பட்ஜெட் கூட்டத் தொடரின் 2வது அமர்வு ஏப்ரல் 6ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தில் முதலமைச்சர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் பங்கேற்று வருகின்றனர். இன்றைய சட்டப் பேரவைக் கூட்டத்தில் பங்கேற்ற எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி, சட்டப்பேரவை கூட்டம் முடிந்ததும் வெளியே வந்து தனது காரை நோக்கிச் சென்றார். அப்போது, அங்கே வந்த ஊடகவியலாளர்கள், எடப்பாடி பழனிசாமியிடம் சசிகலா பற்றி கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளிக்காமல் நடந்து வந்து கொண்டிருந்த பதற்றமாகி அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் ஏற கார் கதவைத் திறந்தார். ஆனால், அந்த கார் எடப்பாடி பழனிசாமி கார் இல்லை. உதயநிதி கார். இதைப் பார்த்த அங்கே இருந்த காவலர் உடனடியாக வந்து, சார் இது உங்க வண்டி இல்லை என்று சொல்ல. இ.பி.எஸ், ஓ அந்த வண்டியா, சாரி, என்று கூறிவிட்டு காவலரிடம் ஏம்பா நம்ம வண்டிகிட்ட கரெக்ட்டா கூட்டிப் போகமாட்ட… அந்த வண்டியில போயி…” என்று கூறிவிட்டு தனது காரில் ஏறிச் சென்றார். ஆனாலும், அவரைப் பின் தொடர்ந்து சசிகலா பற்றி கேள்வி எழுப்பிய ஊடகவியலாளர்களுக்கு பதிலளிக்க மறுத்து வணக்கம் மட்டும் வைத்து புறப்பட்டுச் சென்றார். இந்த வீடியொ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து சசிகலாவை அதிமுக பொதுக்குழு தீர்மானம் நிறைவேற்றியது செல்லும் என்று சென்னை உரிமையியல் நீதிமன்றம் ஏப்ரல் 11ம் தேதி தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளதாக சசிகலா கூறினார். மேலும், அதிமுக பொதுச் செயலாளரை யாரோ 4 பேர் தேர்ந்தெடுக்க முடியாது என்று, தொண்டர்களை தொடர்ந்து சந்திப்பேன் என்றும் சசிகலா கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“