சமபந்தி போஜனத்தை சமத்துவ விருந்து என பெயர் மாற்றி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருக்கிறார்
இது தொடர்பான அறிவிப்பினை தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற ஆதி திராவிடர் – பழங்குடியினர் நலத்துறை கண்காணிப்பு குழுக்கூட்டத்தில் முதலமைச்சர் வெளியிட்டுள்ளார். மேலும், சென்னை நந்தனத்தில் ஆதி திராவிடர் நலத்துறை சார்பில் ரூபாய் 40 கோடியில் புதிய மாணவர் விடுதி கட்டப்படும் எனவும் முதலமைச்சர் அறிவித்திருக்கிறார்
இந்த கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், “இன்று காலை சட்டமன்ற உறுப்பினர் சிந்தனை செல்வன் அவர்கள் என்னை சந்தித்து, ஆகஸ்ட் 15 விடுதலை நாள் உள்ளிட்ட முக்கிய நாட்களில் இதுவரை நடைபெற்று வந்த சமபந்தி போஜனம் என்பதை பெயர் மாற்ற வேண்டுமென்று வேண்டுகோள் வைத்தார். அதனை ஏற்று இனிமேல் அதற்கு சமத்துவ விருந்து என்று பெயர் மாற்றம் செய்யப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மக்களின் இன்னல்களை களையவும், அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் மற்றும் வன்கொடுமைகளை நமது அரசு இரும்புக் கரம் கொண்டு அடக்கும்” என தெரிவித்தார். மேலும், ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறை கீழ் இயங்கும் பள்ளிகளில் ரூ.123 கோடியில் உட்கட்டமைப்பு வசதி செய்யப்படும் என்றும் கூறினார். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத் தொழில்முனைவோரால் தொடங்கப்படும் புத்தொழில் நிறுவனங்களுக்கு உதவிடும் வகையில் தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கத்திற்கு (TANSIM) 30 கோடி ரூபாய் நிதியாக வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM