சர்வதேச பிரச்னைகளில் இந்தியாவுக்கு அமெரிக்கா… பாராட்டு!:இரு நாடுகளின் அமைச்சர்கள் சந்திப்பில் முக்கிய முடிவு| Dinamalar

வாஷிங்டன்:’சர்வதேச பிரச்னைகள், சவால்களை எதிர்கொள்வதில், இந்தியா சுயமாக, திடமான நிலைப்பாடுகளை மேற்கொள்கிறது. அது, இந்தியாவுக்கு மட்டுமல்லாமல், உலக நாடுகளுக்கும் நன்மையை தருவதாக அமைந்துள்ளது’ என, அமெரிக்கா மீண்டும் பாராட்டு தெரிவித்துள்ளது.
இந்தியா, அமெரிக்காவின் வெளியுறவு மற்றும் ராணுவ அமைச்சர்களின் ஆலோசனைக் கூட்டம், அமெரிக்காவின் வாஷிங்டனில் நேற்று நடந்தது. இதற்கு முன்னதாக, ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரதமர் நரேந்திர மோடி பேச்சு நடத்தினர்.அதில், உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்துள்ள போர் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து இரு தலைவர்களும் பேசினர். பேச்சின் முடிவில், ‘சர்வதேச பிரச்னைகளில் இரு நாடுகளும் இணைந்து செயல்படுவது’ என, இரு தலைவர்களும் உறுதி அளித்தனர்.

ஆலோசனை

இந்நிலையில், ஜோ பைடன் அரசு அமைந்த பின், இரு நாடுகளின் ராணுவ மற்றும் வெளியுறவு அமைச்சர்கள் இடையேயான ஆலோசனை கூட்டம், முதல் முறையாக நேற்று நடந்தது. இதில், நம் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், அமெரிக்க ராணுவ அமைச்சர் லாயின் ஆஸ்டின், வெளியுறவு அமைச்சர் டோனி பிளின்கென் பங்கேற்றனர்.
கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது குறித்து ஜெய்சங்கர் கூறியதாவது:கொரோனா பரவல் காலத்தின்போதும், தற்போது ரஷ்யா – உக்ரைன் போர் விவகாரத்திலும், உலக அளவில் நிலையற்ற, கணிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.இது போன்ற காலங்களில் அவற்றை முறியடித்து, எப்படி செயல்பட வேண்டும் என்பது குறித்து விவாதித்தோம்.இம்மாதிரியான சூழலில், சில குறிப்பிட்ட நாடுகளில் இருந்து தேவையான பொருட்கள் கிடைப்பது பாதிக்கப்படுகிறது.

தட்டுப்பாடு

உதாரணத்துக்கு, உக்ரைனில் இருந்து கோதுமை, சர்க்கரை போன்றவை மற்றவர்களுக்கு கிடைக்காத நிலை ஏற்பட்டது. அதுபோல, கச்சா எண்ணெய் விலை உயர்வுடன், தட்டுப்பாடும் ஏற்பட்டது.இது போன்ற நிச்சயமற்ற சூழ்நிலைகளில் இணைந்து செயல்பட்டு, அந்த சவாலை முறியடிப்பது தொடர்பாக விவாதித்தோம். உக்ரைன் விவகாரத்தில் நம்முடைய நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளோம். போரை முடிவுக்கு கொண்டு வர தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.
உக்ரைனில் நடந்த படுகொலைகளுக்கு கண்டனம் தெரிவித்தோம். அதே நேரத்தில், உக்ரைனுக்கு தேவையான மருந்து பொருட்களை மனிதாபிமான அடிப்படையில் அனுப்பி வைத்தோம்.இவ்வாறு அவர் கூறினார்.

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் டோனி பிளின்கென் கூறியதாவது:சர்வதேச அளவிலான பிரச்னைகள், சவால்களின் போது, இந்தியாஎடுத்த சுயமான, திடமான நிலைப்பாடு, அந்நாட்டுக்கு மட்டுமல்லாமல், உலக நாடுகளுக்கும் நன்மையை ஏற்படுத்துவதாகவே அமைந்துள்ளது.நீண்ட காலமாக நட்புகொரோனா காலத்தில் பல நாடுகளுக்கும், தற்போது உக்ரைனுக்கும், இந்தியா மனிதாபிமான முறையில் மருந்துகளை அனுப்பி உதவியுள்ளது. இந்தியா – ரஷ்யா இடையே மிக நீண்ட காலமாக நட்பு உள்ளது.
தற்போது இந்தியாவை நம்முடைய நட்பு நாடாக மட்டுமல்லாமல், கூட்டாளியாகவும் பார்க்கிறோம்.இது போன்ற நேரத்தில்,இந்தியாவுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் நாம் செய்ய வேண்டும்.பொருளாதார தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெயை நம் நட்பு நாடுகள் வாங்குவதை கட்டுப்படுத்தி கொள்ள வேண்டும் என்று விரும்புகிறோம்.
ரஷ்யாவிடம் இருந்து ஆயுதங்கள், தளவாடங்கள் வாங்குவதால், இந்தியா மீது பொருளாதார தடை விதிப்பது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

சந்திப்பின் முக்கிய அம்சங்கள்

* ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில், அணு வினியோக குழு ஆகியவற்றில் இந்தியாவை நிரந்தரஉறுப்பினராக சேர்ப்பதற்கு தொடர்ந்து ஆதரவு அளிப்பதுடன், அதற்கான முயற்சிகளை மேற்கொள்வதாக அமெரிக்கா உறுதி அளித்துள்ளது
* ‘ஆர்டிபிஷியல் இன்டலிஜென்ஸ்’ எனப்படும் செயற்கை நுண்ணறிவு துறையில் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்குவதில் இணைந்து செயல்பட முடிவு செய்யப்பட்டுள்ளது
* விண்வெளி துறையில் இணைந்து செயல்படுவதிலும் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின
* ‘இந்தியாவில் சில அரசுகள், போலீஸ், சிறை துறை அதிகாரிகள் மனித உரிமைகளை மீறி செயல்படுவதாக கூறப்படுவது குறித்து கவனித்து வருகிறோம்’ என, பிளின்கென் கூறினார்
* விமான தயாரிப்பு உள்ளிட்ட துறைகளில் இந்தியாவில் முதலீடுகள் செய்து, ‘மேக் இன் இந்தியா’ திட்டத்துக்கு உதவும்படி, அமெரிக்க நிறுவனங்களுக்கு ராஜ்நாத் சிங் அழைப்பு விடுத்தார்.

எண்ணெய் இறக்குமதி எவ்வளவு?

கூட்டு பேட்டியின்போது, நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து, ஜெய்சங்கர் கூறியதாவது:ரஷ்யாவிடம் இருந்து நாங்கள் கச்சா எண்ணெய் வாங்குவது குறித்து கேள்வி எழுப்பியுள்ளீர்கள்.ரஷ்யாவிடம் இருந்து ஐரோப்பிய நாடுகள் கச்சா எண்ணெய் வாங்குவதை நீங்கள் கவனிக்க வேண்டும். நாங்கள் ஒரு மாதத்தில் வாங்கும் அளவு, அவர்கள் ஒரு நாளின் மதியத்தில் வாங்குவதை விட குறைவு.இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.