பெங்களூரு:
வெளிநாடுகளில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் குறிப்பாக மும்பை மற்றும் குஜராத்தில் புதிய வகை கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த நிலையில் கர்நாடக கொரோனா தடுப்பு நிபுணர் குழுவினருடன் சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் பெங்களூருவில் நேற்று ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட விஷயங்கள் குறித்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
தென்கொரியா, ஹாங்காங், சீனா, ஜெர்மனி, இங்கிலாந்து உள்பட 8 நாடுகளில் கொரோனா 4-வது அலை பரவி வருகிறது. அங்கு கொரோனா எக்ஸ்.இ. மற்றும் எம்.இ. வகை வைரஸ் பரவி வருகிறது. நமது நாட்டில் டெல்லி மற்றும் அரியானா மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அங்கும் இந்த புதிய வகை கொரோனா வைரஸ் பரவுவது கண்டறியப்பட்டுள்ளது.
அதனால் தான் கொரோனா தடுப்பு நிபுணர் குழுவினருடன் ஆலோசனை நடத்தினேன். அதனால் அந்த 8 நாடுகளில் இருந்து விமானம் மூலம் கர்நாடகம் வருபவர்களை கண்காணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்த பயணிகளின் உடல் வெப்பநிலையை பரிசோதிப்பது, அவர்களுக்கு வீடுகளுக்கு சென்ற பிறகு 10 நாட்கள் வரை அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு உடல்நிலை குறித்து விவரங்களை சேகரிப்பது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
தடுப்பூசி போட்டு கொள்ளாத குழந்தைகளை கண்காணிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளன. தினமும் 5 ஆயிரம் குழந்தைகளுக்கு பரிசோதனை செய்யுமாறு நிபுணர்கள் அரசுக்கு ஆலோசனை கூறினர். இதுகுறித்து புதிதாக வழிகாட்டுதல் வெளியிடப்படும். பெரும்பாலானவர்கள் முகக்கவசம் அணிவது இல்லை. வருகிற ஜூன், ஜூலை மாதங்களில் கொரோனா 4-வது அலை பரவக்கூடும் என்று கான்பூர் ஐ.ஐ.டி. நிபுணர்கள் கூறியுள்ளனர்.
அதனால் அனைவரும் பொது வழியில் முகக்கவசம் அணிய வேண்டும். 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 3-வது டோஸ் தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும். இன்னும் 32 லட்சம் பேர் 2-வது டோஸ் தடுப்பூசி போட்டு கொள்ளவில்லை. 102 சதவீதம் பேருக்கு முதல் டோஸ் போடப்பட்டுள்ளது. 4.77 கோடி பேருக்கு 2-வது டோஸ் போட்டு முடிக்கப்பட்டுள்ளது. யாரும் அலட்சியமாக இருக்கக்கூடாது.
15 வயதுக்கு மேற்பட்ட 17 வயதுக்கு உட்பட்டவர்களில் 79 சதவீதம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 49 சதவீதம் பேர் மட்டுமே 3-வது டோஸ் தடுப்பூசி போட்டு கொண்டுள்ளனர்.
அதனால் 60 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தவறாமல் 3-வது டோஸ் தடுப்பூசி தவறாமல் போட்டு கொள்ள வேண்டும். 12 வயதுக்கு மேற்பட்ட 14 வயதுக்கு உட்பட்டபவர்களில் இதுவரை 13.96 லட்சம் பேர் தடுப்பூசி போட்டு கொண்டுள்ளனர்.
மீதமுள்ள சிறுவர்கள் தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும். இதில் பெற்றோர் கவனம் செலுத்த வேண்டும்.
தடுப்பூசிக்கு சில தனியார் மருத்துவமனைகள் அதிக கட்டணம் நிர்ணயித்து இருப்பதாக புகார் வந்துள்ளது. இதற்கு கடிவாளம் போட வேண்டும் என்பது அரசின் நோக்கம்.
இவ்வாறு சுதாகர் கூறினார்.