பாடகர் சீர்காழி கோவிந்தராஜன், கே.பி.சுந்தராம்பாள், தமிழ்த்தென்றல் திருவிக மற்றும் மாடர்ன் தியேட்டர்ஸ் உரிமையாளர் டி.ஆர்.சுந்தரம் ஆகியோருக்கு மணிமண்டபம் அமைப்பது குறித்து நிதிநிலைக்கு ஏற்ப பரிசீலிக்கப்படும் என்று செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்தார்.
பாடகர் சீர்காழி கோவிந்தராஜன், பழம்பெரும் நடிகையும், பாடகியுமான கே.பி.சுந்தராம்பாள், தமிழ்த்தென்றல் திருவிக, சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் உரிமையாளர் டி.ஆர்.சுந்தரம் ஆகியோருக்கு மணி மண்டபம் அமைப்பது குறித்து சீர்காழி உறுப்பினர் மு.பன்னீர்செல்வம், மொடக்குறிச்சி உறுப்பினர் சி.சரஸ்வதி, மதுரவாயல் உறுப்பினர் கே.எம்.கணபதி, திருச்செங்கோடு உறுப்பினர் ஈ.ஆர்.ஈஸ்வரன் ஆகியோர் சட்டப்பேரவையில் நேற்று கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதில் அளித்து செய்தித் துறை அமைச்சர்மு.பெ.சாமிநாதன் கூறியதாவது:
சீர்காழி கோவிந்தராஜனுக்கு மணிமண்டபம் அமைப்பது குறித்து, நிதிநிலைக்கு ஏற்ப முதல்வருடன் கலந்துபேசி அரசு பரிசீலிக்கும். கே.பி.சுந்தராம்பாள் சுதந்திரப் போராட்ட தியாகிகள் பட்டியலில் இடம்பெற்றுள்ளார். சுதந்திர தின உரையில்கூட சுந்தராம்பாள் பற்றி முதல்வர் குறிப்பிட்டிருந்தார். எனவே, மணிமண்டபம் அமைப்பது குறித்து எதிர்காலத்தில் பரிசீலிக்கப்படும்.
தமிழ்த்தென்றல் திருவிக பிறந்த துண்டலம் கிராமத்தில், அவரது மார்பளவு சிலை அமைந்துள்ளது. மேலும், தற்போது மணிமண்டபமோ, நினைவு இல்லமோ கட்டுவது இல்லை என்பது அரசின் கொள்கை முடிவு. அரங்கம் என்ற பெயரில்தான் தற்போது அமைக்கப்பட்டு வருகிறது.
எதிர்காலத்தில் முதல்வரின் கவனத்துக்கு எடுத்துச் சென்று இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.