சென்னையில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தின் 10-வது துணைவேந்தராக டாக்டர் சுதா சேஷய்யன் கடந்த 2018-ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டார். அப்போதைய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அவரை, துணைவேந்தராக நியமனம் செய்தார்.
சுதா சேஷய்யன் 30 ஆண்டுகளுக்கும் மேலான ஆசிரியர் அனுபவம், பரவலான நிர்வாக அனுபவமும் கொண்டவர்.
சென்னை மருத்துவக் கல்லூரியின் துணை முதல்வராகப் பணியாற்றிய இவர், டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தால் சிறந்த நிர்வாகிக்கான விருதையும் பெற்றுள்ளார்.
மருத்துவ இதழ்களுக்காகவும் அவர் பெருமளவில் பங்களித்துள்ளார் மற்றும் கிரேஸ் அனாடமிக்கான ஆசிரியர் ஆய்வுக் குழுவில் பணியாற்றியுள்ளார்
இந்நிலையில், சுதா சேஷையன் பதவிக்காலம் கடந்த ஆண்டு டிசம்பர் 30-ஆம் தேதி முடிவடைந்தது.
இதையடுத்து, புதிய துணைவேந்தரை தேர்வு செய்ய முன்னாள் ஐ.ஏ.எஸ்.அதிகாரி ஆர்.பூர்ணலிங்கம் தலைமையிலான குழு அமைக்கப்பட்டது.
37 பேர் துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பித்திருந்தனர். பல்வேறு கட்ட ஆலோசனைக்கு பிறகு, இதில் 3 பேரை தேர்வு செய்து, தேர்வுக்குழுவினர் ஆளுநர் முடிவுக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி, டாக்டர் சுதா சேஷய்யன் பதவி காலத்தை வரும் டிசம்பர் 30-ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளார்.
மேலும், புதிய துணைவேந்தரை தேர்வு செய்வதற்காக புதிய தேர்வு குழு அமைக்கவும், அந்த குழுவின் மூலம் புதிய விண்ணப்பங்களை பெற்று துணைவேந்தரை தேர்வு செய்யும் நடவடிக்கைகளை விரைவில் தொடங்கவும் தமிழக அரசை, ஆளுநர் கேட்டுக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“