சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்களுக்கும், மாநிலக் கல்லூரி மாணவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதில், ஒருவரை ஒருவர் கற்களால் தாக்கி கொணட சம்பவம் அரங்கேறி உள்ளது.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து திருப்பதி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் மாநிலக்கல்லூரி மாணவர்களும், அரக்கோணம் ரயிலில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்களும் பயணம் செய்துள்ளனர்.
இதில், பெரம்பூர் ரயில் நிலையம் தாண்டியதும் திருப்பதி எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்த பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், மாநில கல்லூரி மாணவர்கள் சேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது, பயணி ஒருவர் ஆபத்து சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தினார். இதனால், ரயிலில் இருந்து கீழே இறங்கிய மாநிலக் கல்லூரி மாணவர்கள், ஆத்திரத்தில் அந்த வழியாக வந்த அரக்கோணம் ரயில் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.
இதனால் அந்த ரயில் நிறுத்தப்பட்டு, ரயிலில் இருந்து இறங்கிய பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் பதிலுக்கு மாநிலக் கல்லூரி மாணவர்களை நோக்கி கல்வீசி தாக்குதல் நடத்தினர். இரு கல்லூரி மாணவர்கள் இடையில் இந்த மோதல் போர்க்களமாக மாறியது.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த ரயில்வே போலீசார் மற்றும் செம்பியம் காவல் நிலைய போலீசார், 15 மாநிலக் கல்லூரி மாணவர்களை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இதுகுறித்து கல்லூரி நிர்வாகம் மற்றும் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்து உள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இரண்டு கல்லூரி மாணவர்களுக்கும் இடையே அவ்வப்போது பிரச்சனை ஏறடுவதும், இது போன்ற தாக்குதல் சம்பவங்கள் அரங்கேறி வருவதும் வாடிக்கையாகி வருவது குறிப்பிடத்தக்கது.
பெரம்பூர் ரெயில் நிலையம் அருகே மாநில கல்லூரி மற்றும் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் இடையே மோதல், ரெயில்கள் மீது கல்வீசி தாக்குதல்…#Collagestudentsattack#trainattack pic.twitter.com/Y065m48LMe
— Kathiravan (@Kathira07115032) April 11, 2022