சென்னை: சென்னை துறைமுகம் முதல் மணலி வரை கடல் பாலம் பாலம் அமைக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையம் திட்ட அறிக்கை தயார் செய்து வருகிறது.
வட சென்னை பகுதியில் சென்னை துறைமுகம், எண்ணூர் துறைமுகம் என 2 துறைமுகங்கள் உள்ளன. இந்த துறைமுகங்களுக்கு தினசரி 1000-க்கும் மேற்பட்ட சரக்கு லாரிகள் சென்று வருகின்றன. இதன் காரணமாக இந்தப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதைக் குறிக்க சென்னை துறைமுகம் முதல் எண்ணூர் வரை அதிவிரைவு சாலை அமைக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையில், வட சென்னை பகுதியில் கடல் வழி பாலம் அமைக்க வேண்டும் என்று நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் ஏ.வ.வேலு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மத்திய அமைச்சர் நிதின் கட்கரியை சந்தித்து கோரிக்கை வைத்திருந்தார். மேலும், முதல்வரும் இது தொடர்பாக பிரதமரிடம் கோரிக்கை வைத்திருந்தார்.
இந்நிலையில், இந்தக் கடல் பாலம் அமைக்கும் பணிக்கு விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யும் பணியை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மேற்கொண்டு வருவதாக நெடுஞ்சாலைத் துறை கொள்கை விளக்கக் குறிபேட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கடல் பாலம் சென்னை துறைமுகத்தின் முதல் வாயிலில் இருந்து துறைமுகம், மணலி வழியாக திருவெற்றியூர் வரை 8 கிலோ மீட்டர் நீளத்திற்கு அமைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.