சென்னை: சட்டப்பேரவையில் நேற்று பள்ளிக்கல்வித் துறை, உயர்கல்வித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பாமக உறுப்பினர் இரா.அருள் பேசியதாவது: மாணவர்களின் மனநிலை மாறி வருகிறது. அவர்களை நல்வழிப்படுத்த அரசுப் பள்ளிகளில் நீதி போதனை, யோகா வகுப்புகள் நடத்த வேண்டும். ஆசிரியர்களுக்கும் திறன் மேம்பாட்டு பயிற்சி அவசியம்.
நீட், யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி போன்ற போட்டித் தேர்வுகளுக்கு ஏற்ப பாடத் திட்டத்தை வகுக்க வேண்டும். தமிழகம் முழுவதும் ஆசிரியர் பற்றாக்குறையை போக்க வேண்டும்.
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் சமூக நீதிக்கு முரணாகபணி நியமனங்கள் நடைபெற்றுள்ளன. பல்வேறு துறைகளில் கோடிக்கணக்கில் முறைகேடுகள் நடந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து முதல்வரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் ஐஏஎஸ் அதிகாரி தலைமையிலான குழு ஒருமுறை வந்து விசாரணை நடத்தியது. அதன் முடிவு என்ன என்று இதுவரை தெரியவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது உயர்கல்வித் துறைஅமைச்சர் பொன்முடி குறுக்கிட்டுப் பேசும்போது, “பாமக உறுப்பினர் அருள், சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் செனட் உறுப்பினராக இருக்கிறார். அங்கு தற்காலிகமாக பதிவாளர் நியமிக்கப்பட்டுள்ளார். நிரந்தர பதிவாளர், தேர்வுகட்டுப்பாட்டாளர் உள்ளிட்ட பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்.உறுப்பினர் கூறிய குற்றச்சாட்டுகுறித்து நீதிபதி நல்லதம்பி தலைமையில் விசாரணை நடத்தப்பட்டு, 4 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்’’ என்றார்.