ராஞ்சி: ஜார்க்கண்ட் மலைப்பகுதியில் ரோப் கார்கள் மோதிக் கொண்ட விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர், 30 பேர் மீட்கப்பட்டனர். மேலும் 18 பேரை ஹெலிகாப்டர் மூலம் மீட்கும் பணி நடைபெறுகிறது.
ஜார்க்கண்ட் மாநிலம் தியோகர் மாவட்டத்தில் திரிகுத் மலைப் பகுதி உள்ளது. இங்குள்ள பாபா வைத்தியநாத் கோயிலிலுக்கு செல்வதற்காக 20 கி.மீ. தூரத்துக்கு ரோப் கார் வசதி அமைக்கப்பட்டுள்ளது. இதில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக, 2 ரோப் கார்கள் நேற்று முன்தினம் மோதிக் கொண்டன. இதில் 2 பேர் உயிரிழந்தனர், பலர் காயமடைந்தனர். 12 ரோப் கார்களில் 48 பேர் பல மணி நேரம் சிக்கித் தவித்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த தேசிய பேரிடர் மீட்புக் குழுவினரும் விமானப்படையினரும் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அவர்கள் ஹெலிகாப்டர் மூலம் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, ரோப் காரில் இருந்த ஒருவர் கீழே விழுந்து உயிரிழந்தார். இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை 3 ஆக உயர்ந்தது.
ரோப் கார்களில் சிக்கியவர்களில் 30 பேர் மீட்கப்பட்ட நிலையில், இன்னும் 18 பேர் சிக்கியுள்ளனர். நேற்று இருள் சூழ்ந்ததும் மீட்பு பணி கைவிடப்பட்டது. ரோப் காருக்குள் இருந்தவர்களுக்கு தண்ணீர் மற்றும் உணவுப் பொருட்கள், ட்ரோன்கள் மூலம் வழங்கப்பட்டன. அவர்கள் இன்று மீட்கப்படவுள்ளனர்.
ரோப் கார்களில் சிக்கியவர்களை மீட்பதற்கான முயிற்சிகள் 20 மணி நேரத்துக்கு மேலாக நடந்தன. ஒரு ரோப் காரில் 4 பேர் உட்கார முடியும். 766 மீட்டர் நீளத்துக்கு, 392 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்ட இந்த ரோப் கார் வழித்தடத்தில், 25 கேபிள் கார்கள் இணைக்கப்பட்டுள்ளன. இது நாட்டின் மிக உயரமான ரோப் கார் வழித்தடம் ஆகும்.
ரோப் கார் விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. கேபிள் கார்களில் சிக்கியவர்களின் குடும்பத்தினர், சம்பவ இடத்தில் குவிந்து மீட்பு பணிகள் தாமதமானதற்கு தங்கள் கோபத்தை வெளிப்படுத்தினர்.