தியோகார்: ஜார்க்கண்டில் ரோப் கார்கள் மோதிக்கொண்ட விபத்தில் 3 பேர் பரிதாபமாக பலியாயினர். 12 பேர் காயமடைந்துள்ளனர். அந்தரத்தில் சிக்கி தவிக்கும் 18 பேருக்கு டிரோன் மூலம் உணவு, குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஜார்க்கண்ட், தியோகர் மாவட்டத்திலுள்ள திரிகுட் மலைப்பகுதியில் பைத்யநாத் கோயில் உள்ளது. இங்கு சுற்றுலா பயணிகள் வசதிக்காக ரோப் கார்கள் இயக்கப்படுகிறன. நேற்று முன்தினம் ரோப் கார்கள் இயக்கப்பட்டபோது, மாலை 4 மணியளவில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக இரண்டு ரோப் கார்கள் ஒன்றோடு ஒன்று மோதின. இதன் காரணமாக அந்த ரோப் வேயில் இருந்த அனைத்து ரோப் கார்களில் இருந்தவர்களும் விபத்தில் சிக்கிக்கொண்டனர்.தகவல் அறிந்து வந்த தேசிய பேரிடர் மீட்பு குழுவினர், அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருந்த கேபின்களில் சிக்கி தவிப்போரை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். கடும் போராட்டத்துக்கு பின் 32பேர் விமானப்படை ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்கப்பட்டனர். இன்னும் 18க்கும் மேற்பட்டோர் ரோப் கார்களில் சிக்கி உள்ளனர். அவர்களை மீட்கும் பணியில் ராணுவம், விமானப்படை, தேசிய பேரிடர் மீட்பு குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அவர்கள் உணவு மற்றும் குடிநீர் ஆகியவை டிரோன் மூலம் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த விபத்தில் 3 பேர் பலியாகி உள்ளனர். 12 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். விபத்தில் 3 பேர் பலியானதற்கு மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் இரங்கல் தெரிவித்துள்ளார்.