ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட ரோப் கார் விபத்தில் சிக்கியவர்களில் இதுவரை 34 பேர் மீட்கப்பட்டனர். 40 மணிநேரம் நீடித்த போராட்டத்தில் எஞ்சிய 3 பேரை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதேவேளையில், 3 பேர் உயிரிழந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜார்க்கண்ட் மாநிலம் தியோகர் மாவட்டத்தில் உள்ள பாபா பைடியா கோவிலுக்குச் செல்ல ரோப் கார் சேவை இயக்கப்பட்டு வருகிறது. தரையில் இருந்து 392 அடி உயரத்தில் 766 மீட்டர் நீளத்திற்கு அமைக்கப்பட்டிருக்கும் இந்த ரோப் வே தான் இந்தியாவிலேயே மிக உயரத்தில் உள்ள செங்குத்தான ரோப் வே ஆகும். இங்கு பயணம் சென்ற போது, ரோப் கார்கள் ஒன்றோடொன்று மோதியதில் 2 பேர் உயிரிழந்தனர். தேசிய பேரிடர் மீட்பு குழுவினரும், விமானப்படை வீரர்களும் இணைந்து, இதுவரை 34 பேரை மீட்டுள்ளனர். இந்திய விமானப்படைக்குச் சொந்தமான 2 மிக் ரக ஹெலிகாப்டர்கள் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. ரோப் கார்களில் காயங்களுடன் சிக்கியிருந்தவர்களை மீட்டுப்பாடை வீரர்கள் ஹெலிகாப்டரில் சென்று மீட்டனர். அப்போது மீட்கும்போதே ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்தார். ட்ரோன் விமானங்களின் உதவியுடன் ரோப்கார்களில் சிக்கியிருப்பவர்களுக்கு உணவு, தண்ணீர் கொடுக்கப்பட்டது. விபத்து ஏற்பட்டதுமே ரோப்கார்களை இயக்கிய நிறுவன ஊழியர்கள் தப்பியோடினர். தொழிநுட்ப கோளாறால் விபத்து ஏற்பட்டது என்றாலும், இதுவரை விபத்திற்கான முழுமையான காரணம் வெளியாகவில்லை.