புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை (ஏப்ரல் 11, 2022) அமெரிக்க அதிபர் ஜோ பிடனுடன் மெய்நிகர் சந்திப்பை நடத்திய நிலையில், இருவரும் ரஷ்யா-உக்ரைன் போர் குறித்து விவாதித்தனர். “உக்ரைனில் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருக்கும் நேரத்தில் இன்றைய பேச்சுவார்த்தை நடைபெறுகிறது” என்று பிடனிடம் பிரதமர் மோடி கூறினார்.
பிப்ரவரி 24 அன்று படையெடுப்பு தொடங்கியதில் இருந்து ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினுடன் பலமுறை பேசியதாகவும், உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியுடன் நேரடி பேச்சுவார்த்தை நடத்த பரிந்துரைத்ததாகவும் பிரதமர் மோடி கூறினார்.
“சில வாரங்களுக்கு முன்பு வரை, 20,000 க்கும் மேற்பட்ட இந்தியர்கள் உக்ரைனில் சிக்கித் தவித்தனர். அவர்களில் பெரும்பாலோர் இளம் மாணவர்கள். மிகுந்த முயற்சிக்குப் பிறகு, அவர்களை அங்கிருந்து பத்திரமாக வெளியேற்ற முடிந்தது. இருப்பினும் ஒரு மாணவர் உயிரிழந்தார்” என பிரதமர் மோடி கூறினார்.
” உக்ரைன் மீதான தாக்குதல் தொடங்கியதில் இருந்து உக்ரைன் மற்றும் ரஷ்யா ஆகிய இரு நாடுகளின் அதிபர்களுடன் நான் பலமுறை தொலைபேசியில் பேசினேன். அமைதிக்கு வேண்டுகோள் விடுத்தது மட்டுமின்றி, உக்ரைன் அதிபருடன் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்த அதிபர் புடினிடம் பரிந்துரைத்தேன்” என்று மோடி கூறினார்.
உக்ரைன் விவகாரம் குறித்து இந்திய நாடாளுமன்றத்திலும் விரிவாக விவாதிக்கப்பட்டதாக அவர் கூறினார். சமீபத்தில் புச்சா நகரில் அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்ட செய்தி மிகவும் கவலை அளிக்கிறது என்று பிரதமர் மோடி கூறினார்.
மேலும் படிக்க | ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ஒரு போர்க் குற்றவாளி: ஜோ பைடன்
“நாங்கள் புச்சா சம்வத்தை உடனடியாகக் கண்டித்தோம், மேலும் நியாயமான விசாரணைக்கு கோரிக்கை விடுத்துள்ளோம். ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையே நடந்து வரும் பேச்சுவார்த்தை அமைதிக்கு வழி வகுக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்,” என்று அவர் கூறினார்.
இந்தியா உக்ரைனுக்கு மருந்துகள் மற்றும் பிற நிவாரணப் பொருட்களை அனுப்பியுள்ள நிலையில், உக்ரைனில் உள்ள பொதுமக்களின் பாதுகாப்பிற்கும், அவர்களுக்கு மனிதாபிமான உதவிகளை தடையின்றி வழங்குவதற்கும் இந்தியா முக்கியத்துவம் அளித்துள்ளது என்றும் பிரதமர் மோடி, ஜோ பைடனிடம் கூறினார்.
“நாங்கள் உக்ரைன் மற்றும் அதன் அண்டை நாடுகளுக்கு மருந்துகள் மற்றும் பிற நிவாரணப் பொருட்களை அனுப்பியுள்ளோம். மேலும் உக்ரைனின் கோரிக்கையின் பேரில், விரைவில் நாங்கள் மற்றொரு மருந்துத் தொகுப்பை அனுப்புகிறோம்,” என்று அவர் கூறினார்.
நேற்றைய மெய்நிகர் சந்திப்பின் போது, இரு தலைவர்களும் கோவிட்-19 தொற்றுநோய், உலகளாவிய பொருளாதார மீட்பு, காலநிலை நடவடிக்கை மற்றும் தெற்காசியா மற்றும் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் சமீபத்திய முன்னேற்றங்கள் போன்ற பல பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சினைகள் குறித்து விரிவான கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.
சமீபத்திய ஆண்டுகளில் இருதரப்பு உறவுகளில் ஏற்பட்டுள்ள குறிப்பிடத்தக்க முன்னேற்றம் குறித்தும் அவர்கள் ஆய்வு செய்தனர்.
இந்தியா-அமெரிக்கா இடையில் விரிவான உலகளாவிய மூலோபாய கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்துவது இரு நாடுகளுக்கும் மிகப்பெரிய நன்மையை அளிக்கும் என்றும், உலக அமைதி, செழிப்பு மற்றும் ஸ்திரத்தன்மைக்கு பங்களிக்கும் என்பதை பிரதமர் மோடியும், அதிபர் பிடனும் ஒப்புக்கொண்டனர்.
மேலும் படிக்க | அமெரிக்காவின் முதல் கறுப்பினப் பெண் நீதிபதி!