‛‛டாலர் வரட்டும்…கடனை திருப்பி தர்றோம்: இலங்கை தடாலடி முடிவு| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

கொழும்பு: கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கை, வெளிநாடுகளுக்கு கடன் தொகையை திருப்பி செலுத்துவதை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது.

இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அன்னிய செலாவணியும் தீர்ந்து போனதால், உணவுப்பொருட்கள் மற்றும் எரிபொருளை இறக்குமதி செய்ய முடியாமல் திணறி வருகிறது. இதனால், அங்கு விலைவாசி கடுமையாக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக அந்நாட்டு மக்கள் பல்வேறு தடைகளை மீறி போராட்டம் நடத்தி வருகின்றனர். கடுமையான மின்வெட்டும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இலங்கைக்கு, நிதியுதவி, உணவுப்பொருட்கள், எரிபொருள் அளித்து இந்தியா உதவி வருகிறது.

சிக்கலில் இருந்து விடுபட சர்வதேச நிதியத்தின் உதவியை இலங்கை நாடியுள்ளது. இந்த கோரிக்கை இன்னும் பரிசீலனையில் உள்ளது. முடிவு அறிவிக்கப்படவில்லை.

இந்நிலையில், இலங்கை நிதியமைச்சகம் இடைக்கால கொள்கை முடிவு ஒன்றை வெளியிட்டுள்ளது.

latest tamil news

அதில் கூறப்பட்டுள்ளதாவது: இலங்கை அரசுக்கு 5100 கோடி டாலர் வெளிநாட்டு கடன் உள்ளது. மிக மோசமான பொருளாதார சூழல் காரணமாக இந்த கடனை திருப்பி செலுத்துவதை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளோம். இலங்கைக்கு கடன் கொடுத்தவர்கள், வெளிநாட்டு அரசுகள் ஆகியோர் கடன் மற்றும் வட்டியை இலங்கை பணத்தில் பெற்று கொள்ளலாம். சர்வதேச நிதியத்திடம் உதவி கோரியிருக்கிறோம். அது நிலுவையில் உள்ளது.

இலங்கை அரசின் நிதிநிலைமை மிகவும் மோசமான நிலைக்கு செல்வதை தடுக்கும் நோக்கத்தில் இந்த அவசர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடனை செலுத்துவது சவாலானது என தெரிந்து தான் இந்த முடிவுக்கு வந்துள்ளோம். இது தற்காலிகமான முடிவு தான். போதிய அளவு டாலர் எங்களிடம் வந்த பிறகு கடனை திருப்பி செலுத்துவோம். இவ்வாறு அந்த கொள்கை முடிவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.