சான் பிரான்சிஸ்கோ : டெஸ்லா நிறுவன தலைவர் எலான் மஸ்க், ‘டுவிட்டர்’ நிறுவனத்தின் இயக்குனர் குழுவில் சேர விருப்பமில்லை என அறிவித்துள்ளார்.சமீபத்தில், எலான் மஸ்க், டுவிட்டர் நிறுவனத்தின், 9 சதவீத பங்குகளை வாங்கி, அதன் இயக்குனர் குழுவில் சேர உள்ளதாக அறிவித்தார்.
இந்நிலையில், டுவிட்டர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பரக் அகர்வால், ஊழியர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில் கூறப்பட்டுள்ளதாவது:கடந்த 9ம் தேதி, எலான் மஸ்க் டுவிட்டர் இயக்குனர் குழுவில் இணைவதாக இருந்தது. ஆனால், திடீரென அவர் அதில் இணைய விருப்பமில்லை என தெரிவித்துள்ளார். இது, ஒருவகையில் அந்நிறுவனத்திற்கு நல்லது என்றே நான் கருதுகிறேன். அவர் மற்ற இயக்குனர்களைப் போல, நிறுவனம் மற்றும் பங்குதாரர்களின் நலனுக்கு பாடுபடுவார்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது. எலான் மஸ்க் நிர்வாக இயக்குனர் குழுவில் சேர மறுத்ததற்கான காரணம் தெரியவில்லை. எனினும், இந்த முடிவுக்குப் பின், அவர், வாய் பொத்திய கேலிச்சித்திரம் ஒன்றை, டுவிட்டரில் பதிவேற்றியுள்ளார். எலான் மஸ்க், அடிக்கடி சர்ச்சை கருத்துக்களை வெளியிட்டு வருபவர். அவர் இயக்குனர் குழுவில் சேர்ந்தால், சுதந்திரம் பறிபோகும் என, நிர்வாகமும், ஊழியர்களும் கருதியதாக தகவல் வெளியானது. இதைத் தொடர்ந்து, தன் முடிவை எலான் மஸ்க் மாற்றிக் கொண்டதாக கூறப்படுகிறது.
Advertisement