கொரோனா தாக்கத்தின் காரணாக கடந்த இரண்டாண்டுகளாக, கர்நாடக மாநிலத்தில் பள்ளிகள் சரி வர நடைபெறவில்லை. இந்த இரு கல்வியாண்டில் பெரும்பாலான நாட்கள் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமே வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன.
அத்துடன் கடந்த கல்வியாண்டில், பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு அகமதிப்பீட்டு முறையில் மதிப்பெண்கள் வழங்கப்பட்டன.
மத்திய, மாநில அரசுகள் அமல்படுத்திய பொது முடக்கம், கொரோனா தடுப்பூசி தொடர் முகாம்கள் போன்றவற்றின் பயனாக கொரோனா தாக்கம் படிப்படியாக குறைந்து நடப்பு கல்வியாண்டில் பள்ளி மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.
இதனையடுத்து, 10, 12 வகுப்பு மாணவர்களுக்கு வழக்கம் போல் பொதுத் தேர்வு நடத்தப்படும் என்று மாநில கல்வித் துறை திட்டவட்டமாக அறிவித்திருந்தது. இதன்படி கர்நாடகாவில் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த மாதம் 28 ஆம் தேதி பொதுத் தேர்வு தொடங்கியது.
இந்த தேர்வு இன்றுடன் முடிவடைந்துள்ள நிலையில், மே மாதம் இரண்டாவது வாரத்தில் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று மாநில பள்ளி கல்வித் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அதனை தொடர்ந்து ஜூன் மாதம் கடைசி வாரத்தில் துணைத் தேர்வு நடத்தப்படும் என்றும், 98% மாணவர்கள் 10 ஆம் வகுப்பு தேர்வை எழுதியுள்ளனர் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.