தஞ்சாவூர்: தஞ்சாவூரில் பல ஆண்டுகளாக தனியாரால் ஆக்கிரமிக்கப்பட்டு டீக்கடை நடத்தப்பட்டு வந்த தேர் நிலை மண்டபம் நேற்று இரவு மாநகராட்சி அதிகாரிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூரில் தேரோடும் வீதிகளான நான்கு ராஜ வீதிகளிலும் தேர் நிலை மண்டபங்கள் உள்ளன. இந்த மண்டபங்கள் மராட்டியர் காலத்தில் அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய செங்கல் மற்றும் சுண்ணாம்புக் கலவைகளைக் கொண்டு சுதை சிற்பங்களாக வடிவமைக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் பெரிய கோவிலில் தேரோட்டம் நடைபெறும் போது, இந்த தேர் மண்டபம் அருகே வந்து, தேர் நிற்கும்போது தேர் நிலை மண்டபத்தின் அருகே உள்ள கோயில்களில் உற்சவர் சுவாமிகள் இந்த மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். அப்போது தேரில் உள்ள தஞ்சை பெரிய கோவிலின் சுவாமியின் அம்பாளுக்கும், தேங்காய் பழம் உள்ளிட்ட சிறப்புகளை அந்தந்த கோயில் சார்பில் வழங்கப்படுவது வழக்கம் . ஆனால் தஞ்சாவூரில் கடந்த நூறு ஆண்டுகளுக்கும் மேலாக பெரிய கோயில் தேரோட்டம் நடைபெறாமல் இருந்தது. அதன் பின்னர் 2015ஆம் ஆண்டு இந்த தேர் புதிதாக செய்யப்பட்டு நடைபெற்று வருகிறது. 100 ஆண்டுகளுக்கு மேல் தேரோட்டம் நடைபெறாமல் இருந்ததால் இந்த தேர் நிலை மண்டபங்களும் பல்வேறு ஆக்கிரமிப்புகள் உள்ளானது.
இந்த நிலையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தஞ்சாவூர் மேலவீதியில் உள்ள விஜய ராமர் கோயில் தேர் நிலை மண்டபம், கொங்கணேஸ்வரர் கோவில் தேர் நிலை மண்டபம், சங்கரநாராயணன் கோயில் தேர் நிலை மண்டபம், வீர அனுமன் கோயில் தேர் நிலை மண்டபம் ஆகியவை தனியார் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்டு தமிழக தொல்லியல் துறையின் அனுமதியோடு ரூ.50 லட்சம் செலவில் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தேரோடும் வீதிகளான கீழராஜ வீதியில் உள்ள பெருமாள் கோவில் எதிரே தேர் நிலை மண்டபம் ஒன்று இருந்தது வரலாற்று ஆவணங்களின் ஆய்வில் தெரியவந்தது.
இதை யடுத்து கீழராஜ வீதியில் சாமந்தன் குளம் செல்லும் அந்தப் பகுதியில் பல ஆண்டுகளுக்கு முன்பு ஆக்கிரமிக்கப்பட்டு அங்கு டீக்கடை நடத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில் அந்த தேர் நிலை மண்டபத்தை நேற்று இரவு தஞ்சாவூர் மாநகராட்சி அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதுகுறித்து அழகிய தஞ்சாவூர் திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் ஆடிட்டர் ரவிச்சந்திரன் கூறுகையில், “தஞ்சாவூரில் புராதான சின்னங்கள் மீக்கப்பட்டு அதை மீண்டும் அழகு படுத்தப்பட்டு வருகிறது. தஞ்சாவூரில் பல்வேறு வரலாற்று ஆய்வுகள் புதைந்து கிடக்கிறது இவற்றை ஒவ்வொன்றாக மீட்கும் நடவடிக்கையில் அழகிய தஞ்சையின் அமைப்பினர் உள்ளிட்ட பல்வேறு தன்னார்வ அமைப்பினரும் இணைந்து செயல்பட்டு வருகிறோம் என்றார். இதுகுறித்து தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் கூறுகையில், தஞ்சாவூரில் பழமையான தேர் நிலை மண்டபங்கள் ஒவ்வொன்றாக தனியார் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்டு அது பழமை மாறாமல் சீரமைக்கப்பட்டு வருகிறது. அதேபோல் தற்போது கீழராஜ வீதியில் ஒரு தேர் நிலை மண்டபம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்த மண்டபமும் பழமை மாறாமல் சீரமைக்கப்படும்” என்றார்.