வாழ்வு இழந்து தஞ்சம் புகுந்துள்ள இலங்கைத் தமிழ் மக்களுக்கு உதவ வேண்டும் என மத்திய வெளியுறவு அமைச்சருக்கு சு.வெங்கடேசன் எம்.பி கடிதம் எழுதியுள்ளார்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, வேலையிழப்பு, உச்சத்தை தொட்டுள்ள பணவீக்கம் காரணமாக தமிழ் மக்கள் தனுஷ்கோடி அரிச்சல் முனையில் வந்து இறங்கி வருகிறார்கள். தினமும் இந்த எண்ணிக்கை அதிகரிப்பதாக செய்திகள் வருகின்றன. இலங்கையில் உள்ள தமிழ் மக்களும் சொல்லொண்ணா துயரில் ஆழ்ந்துள்ளனர்.
இந்த சூழலில் மனிதாபிமான அடிப்படையில் ஒன்றிய அரசு இரண்டு விசயங்களை செய்ய வேண்டும். ஒன்று, தமிழ்நாடு முதல்வர், அத்தியாவசிய பொருட்களை அங்குள்ள தமிழ் மக்களுக்கு இந்திய தூதரகம் மூலம் வழங்க ஒன்றிய அரசின் அனுமதியை நாடி வெளியுறவு அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார். ஒன்றிய அரசு தாமதமின்றி அனுமதி வழங்க வேண்டும்.
இரண்டாவது, இந்தியாவில் வந்து தஞ்சம் புகும் மக்களுக்கு தங்குமிடம், அத்தியாவசிய பொருட்களை உடனே உறுதி செய்ய வேண்டும் இதற்கு ஒன்றிய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்வார் என நம்புவதாக மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கடிதம் எழுதியுள்ளார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM