‘பீஸ்ட்’ திரைப்படத்தை நிச்சயம் வெளியிட வேண்டும் என்று திரையரங்க உரிமையாளர்களுக்கு கரூர் மாவட்ட விஜய் ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கரூரில் விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படம் வெளியாகாது என தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படம் நாளை வெளியாகிறது தமிழகம் முழுவதும் 800 க்கும் அதிகமான திரையரங்குகளில் இந்தப் படம் வெளியாக உள்ள நிலையில் கரூர் மாநகரில் உள்ள 3 திரையரங்குகளில் விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படம் வெளியாகாது என மாநகராட்சி தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளனர்.
’பீஸ்ட்’ திரைப்படம் கரூர் மாநகரில் உள்ள 3 திரையரங்குகள் மற்றும் குளித்தலை, அரவக்குறிச்சி ஆகிய இடங்களில் தலா ஒரு திரையரங்குகளில் திரையிடுவதாக பத்திரிகைகளில் அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கான, முன் பணிகளும் நடைபெற்று வந்த நிலையில் இன்று கரூர் மாநகர தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் இந்த அறிவிப்பு ட்விட்டரில் வெளியிடப்பட்டுள்ளது. அதில், தங்களுக்கு திரைப்படம் கிடைக்கவில்லை என்றும் இதனால் திரைப்படத்தை திரையரங்கில் வெளியிட முடியவில்லை. அதற்காக வருந்துவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து திரையங்கம், விநியோகஸ்தர், ரசிகர்மன்ற வட்டாரங்களில் விசாரித்தபோது, பட விநியோகஸ்தர் மற்றும் திரையரங்க உரிமையாளர்களிடையே வசூல் தொகையை பங்கீட்டு கொள்வது தொடர்பாக ஒரு உடன்பாடு எட்டப்படவில்லை. இதனால் படம் வெளியாவதில் சிக்கல் என்கின்றனர்.
இதுகுறித்து கரூர் மாவட்ட விஜய் மக்கள் இயக்கத் தலைவர் மதியழகன் அளித்த பேட்டியில், ’பீஸ்ட்’ திரைப்படம் உலகம் முழுவதும் வெளியிடப்படுகிறது. ஆனால், கரூரில் இந்த படம் வெளியிடவில்லை என திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் டிவிட்டரில் அறிவித்துள்ளது. மாஸ்டர் படத்துக்கு பின்னர் 15 மாதங்களுக்கு பிறகு விஜய்யை திரையில் காண ஆவலுடன் காத்திருந்த நிலையில் படம் வெளியாகாது என்பது அதிர்ச்சியை, ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தயவு செய்து திரையரங்க உரிமையாளர்கள் பீஸ்ட் திரைப்படத்தை வெளியிட வேண்டும்” என்றார்.