ஜம்மு: ஜம்மு காஷ்மீர் மாநிலம் பொமாய் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட வடூர பாலா கிராமத்திற்கு அருகிலுள்ள சோனார்வைன் பாலத்தில் அருகே பாதுகாப்பு படையினர் நேற்றிரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான முறையில் மூன்று பேர் அவ்வழியாக சென்றனர். இருளை பயன்படுத்தி அங்கிருந்து தப்பிக்க முயன்றனர். உஷாரான பாதுகாப்பு படையினர் விரட்டிச் சென்று அவர்கள் மூவரையும் பிடித்தனர். அவர்களிடம் இருந்த 3 கைத்துப்பாக்கிகள், 22 துப்பாக்கி குண்டுகள், 1 கையெறி குண்டு, 79,800 ரூபாய் ரொக்கம் ஆகியன மீட்கப்பட்டன. முதற்கட்ட விசாரணையில், அவர்கள் மூவரும் லஷ்கர் இ தொய்பா அமைப்புடன் நேரடி தொடர்பில் இருந்தவர்கள் என்பதும், பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததாகவும் தெரியவந்தது. இது தொடர்பாக பொமாய் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிந்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.