ம.தி.மு.க தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் கோவில்பட்டியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ம.தி.மு.க-வின் தலைமைக் கழகச் செயலாளர் துரை வைகோ கலந்து கொண்டுப் பேசினார். இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பி வைக்கப்பட்ட 11 தீர்மானங்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கமால் ஆளுநர் காலம் தாழ்த்தி வருகிறார். தி.மு.க அரசும், முந்தைய அ.தி.மு.க அரசும் பல்வேறு சட்டத் தீர்மானங்களை ஆளுநரிடம் வழங்கியுள்ளன. இதில், காலதாமதம் செய்வது ஜனநாயகப் படுகொலையாகும்.
பெட்ரோல், டீசல், சமையல் கேஸ் விலை உயர்வு காரணமாக அனைத்துப் பொருள்களின் விலையும் உயர்ந்துள்ளது. இதனை கண்டித்து ம.தி.மு.க சார்பில் முதன் முதலில் குரல் கொடுக்கப்பட்டு போராட்டம் நடைபெற்றது. டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்பதில் ம.தி.மு.க உயிர்பலி கொடுத்துள்ளது. 100 வயதான என் பாட்டி போராட்டத்தில் ஈடுபட்டு உயிரிழந்தார். பூரண மது விலக்கு என்பதுதான் ம.தி.மு.க-வின் கொள்கை.
முதல்வரிடம் இதை வலியுறுத்துவோம். அண்ணா சொன்ன இருமொழிக்கொள்கை ஏற்றுக்கொள்ளக் கூடியது. மும்மொழிக் கொள்கையில் மாற்றுக் கருத்து உண்டு. மும்மொழிக் கொள்கையில் மூன்றாவதாக இந்திதான் என்று கூறுவதைத் தான் நாங்கள் எதிர்க்கிறோம். மூன்றாவது மொழியைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்றால் அவர்களுக்கு விருப்பப்பட்ட மொழியைக் காற்றுக் கொள்ளலாம்.
ஆனால், இந்தியைத்தான் படிக்க வேண்டும் எனச் சொல்வதற்கு மத்தியரசுக்கு அதிகாரம் கிடையாது. மும்மொழிக் கூடாது என்பது எங்கள் கொள்கை, அப்படி இருந்தாலும் மூன்றாவது மொழி இந்திதான் என்று கூறக்கூடாது. திராவிட இயக்கங்கள் இந்தியை எதிர்க்கவில்லை, இந்தி திணிப்பைதான் எதிர்க்கின்றன” என்றார்.
அதைத் தொடர்ந்து அவரிடம், `நீங்கள் அரசியலுக்கு எப்படி வந்தீர்கள்?’ எனக் கேட்டதற்கு, “நான் அரசியலுக்கு வருவதை குடும்பத்தினர் விரும்பவில்லை… ம.தி.மு.க நிர்வாகிகள், தொண்டர்களால்தான் அரசியலில் திணக்கப்பட்டேன்” என்றார்.