திருமழபாடி: `நந்தி கல்யாணம் பார்த்தால் முந்திக் கல்யாணம்' குவிந்த பக்தர்கள்!

திருமழபாடி வைத்தியநாத சுவாமி திருக்கோயிலில் நந்தியம்பெருமான் சுயசாம்பிகை திருக்கல்யாணம் வெகு விமர்சையாக நடைபெற்றது. திருக்கல்யாணத்தைக் காணத் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

திருக்கல்யாணம்

நந்தி கல்யாணம் பார்த்தால் முந்திக் கல்யாணம் இந்தத் திருமணத்தை நேரில் காணும் வரன்களுக்கு அடுத்த நந்தி கல்யாணத்துக்குள் திருமணம் நடைபெறும் என்பது ஐதிகம். நந்தி தேவரின் திருக்கல்யாணம் நடைபெற்ற தலம் தமிழ்நாட்டிலேயே திருமழபாடி திருத்தலம் மட்டும்தான்.

திருமழபாடி நந்தி திருக்கல்யாணத் தலத்தில் தேர்த் திருவிழா!

சிவபெருமான் தாமே முன்னின்று நந்தியெம்பெருமானுக்குத் திருக்கல்யாணம் செய்து வைத்த திருத்தலம் திருமழபாடி திருத்தலம். கொள்ளிடம் ஆற்றின் கரையில் அமைந்திருக்கிறது திருமழபாடி அருள்மிகு வைத்தியநாத சுவாமி ஆலயம். அப்பர், சுந்தரர், திருஞானசம்பந்தர் ஆகியோரால் பாடல் பெற்ற தலம் இது.

திருமானூர் அருகேயுள்ள திருமழபாடி சுந்தராம்பிகை உடனாய வைத்தியநாத சுவாமி கோயில் மாவட்ட சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக விளங்குகிறது. இந்த கோயில் அப்பர், சுந்தரர், திருஞான சம்பந்தரால் பாடல் பெற்றதும், வசிஷ்டர், அகஸ்தியர் முனிவரால் பூஜிக்கப் பெற்றதுமாகும். இந்தக் கோயிலில் வியாக்ர பரத முனிவரின் புதல்வி சுயசாம்பிகை தேவியருக்கும்,

வைத்தியநாத சுவாமி

சிலா முனிவரின் புதல்வர் திருநந்தியெம்பெருமானுக்கும் ஆண்டு தோறும் பங்குனிமாதம் புனர்பூச நட்சத்திரத்தில் திருக்கல்யாண நிகழ்ச்சி கோயிலின் முன்பாக உள்ள திருமண மேடையில் நடைபெறும்.

மஞ்சள், சந்தனம், விபூதி, மாவுப்பொடி, திரவியப்பொடி, தேன், பன்னீர், பஞ்சாமிர்தம், இளநீர், பழச்சாறு, தயிர், பால் போன்ற பொருள்களால் இருவருக்கும் சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு,

பின்னர் வேத வித்வான்கள் யாக பூஜையுடன் வேத மந்திரங்கள் முழங்க, நாதஸ்வர இன்னிசையுடன் கோயிலின் முன்பு கண்ணாடி பல்லக்கில் வீற்றிருக்கும் சுந்தராம்பிகை உடனாய வைத்தியநாத சுவாமி மற்றும் திருவையாறு அறம் வளர்த்த நாயகி உடனாய அய்யாரப்பர் ஆகியோர் எழுந்தருள ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் மணமகள் சுயசாம்பிகை தேவியர் கழுத்தில் மணமகன் நந்தியெம்பெருமான் தாலி கட்ட, பக்தர்கள் அட்சதை தூவ திருக்கல்யாணம் சிறப்பாக நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து கொள்ளிடம் ஆற்றில் திருச்சி கலை பண்பாட்டுத்துறை மையத்தின் சார்பில் கலை நிகழ்ச்சிகளும், வானவேடிக்கையும் நடைபெற்றது. நந்தியம்பெருமான் திருமணத்தினை பொதுமக்கள் காண, தமிழ்நாடு போக்குவரத்துக் கழகம் சார்பில் திருச்சி, அரியலூர், தஞ்சாவூர், திருமானூர் உள்ளிட்ட பல நகரங்களிலிருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.