புதுடெல்லி: ‘இந்தியாவில் நீதிபதிகளின் ஓய்வு வயது 65 ஆக நிர்ணயிக்கப்பட்டு இருப்பது சரியல்ல,’ என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா கூறியுள்ளார். இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதி ஸ்டீபன் பிரேயர் (83) உள்ளிட்டோர் பங்கேற்ற காணொலி கருத்தரங்கு நேற்று முன்தினம் நடந்தது. இதில் பேசிய அமெரிக்க நீதிபதி ஸ்டீபன் பிரேயர், ‘அமெரிக்காவில், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மரணத்தின் மூலம் மட்டுமே பதவியை விட்டு வெளியேறுகிறார்கள். இதைத்தவிர வேண்டுமானால் அவர்களாகவே தனியான விருப்ப முறையில் பதவியில் இருந்து விலகி ஒய்வு பெறுகிறார்கள். இதில் கடாய வயது வரம்பு என்பது கிடையாது,’ என தெரிவித்தார்.இதையடுத்து, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா பேசியதாவது: இந்தியாவில் நீதிபதியின் ஓய்வு வயது 65 என்பது மிகக் குறைவானது. இது, சரியான ஒன்று கிடையாது. உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் நீதபதி, உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவும் 22 ஆண்டுகள் பணி புரிந்துள்ளேன். இந்திய நீதித்துறையில் சேரும் போதே எங்களின் ஓய்வு தேதி தெரியும். அதில், விதிவிலக்குகள் எதுவும் இல்லை. எனக்கு இன்னும் போதுமான ஆற்றல் உள்ளது. நான் ஒரு விவசாயத் தொழிலாளியின் மகன். எனக்கு இன்னும் விவசாயம் செய்ய கொஞ்சம் நிலம் உள்ளது. நான் அடிப்படையில் மக்கள் மனிதன். நான் மக்களுடன் இருக்க விரும்புகிறேன். அது எனது மாணவப் பருவத்தின் இயல்பு. மக்களின் நலனுக்காக எனது ஆற்றலை முதலீடு செய்ய சரியான வழியை நான் கண்டுபிடிப்பேன்.நீதித்துறையில் இருந்து ஓய்வு பெறுவது என்பது, பொது வாழ்வில் இருந்து ஓய்வு பெறுவதைக் குறிக்காது. நீதிபதிகளை நியமிப்பதில் சுதந்திரமான அமைப்பு தேவை. இந்திய அரசியலமைப்பு அரசின் மூன்று பிரிவிகளுக்கு இடையே அதிகாரங்களைப் பிரிப்பதைக் கட்டாயப்படுத்துகிறது. நிர்வாக, நாடாளுமன்ற நடவடிக்கைகளை மறுஆய்வு செய்ய நீதித்துறை தேவை என கட்டாயப்படுத்தப்பட்டு உள்ளது. அதனால்தான், நீதித்துறையின் சுதந்திரம் பேச்சுவார்த்தைக்கு உட்படாது என்று கூறுகிறேன். அடிப்படை உரிமைகள், சட்டத்தின் ஆட்சியை நிலை நாட்டுவது நீதிமன்றங்கள் மட்டுமே. நீதித்துறை சுதந்திரமாக செயல்பட்டால் தான் மக்கள் அதை நம்புவார்கள். நீதிமன்றங்களுக்கு நீதிபதிகளை நியமிப்பதில் தலைமை நீதிபதி, கொலிஜியம் முதன்மையானது. நீதிபதிகளை நியமிக்கும் கொலிஜியம், மிகப்பெரிய ஜனநாயக அமைப்பாகும். இந்தியாவில் நீதிபதிகளே நீதிபதிகளை நியமிக்கிறார்கள் என்ற எண்ணம் உள்ளது. இது தவறான கருத்து. அதை நான் திருத்த விரும்புகிறேன். நீதிபதிகள் நியமனம் நீண்ட ஆலோசனைக்குப் பிறகு செய்யப்படுகிறது. சம்பந்தப்பட்ட பல தரப்பினருடன் ஆலோசித்து, நீதிபதிகள் தேர்வு நடக்கிறது. இது பலருக்கு தெரியாமல் இருக்கலாம். பெரும்பாலும், ஒருமித்த கருத்து அடிப்படையில்தான் நியமனம் நடக்கிறது. இதில், இதை விட சிறிந்த ஜனநாயயக நடைமுறை இருக்கும் என்று நான் கண்டிப்பாக நினைக்கவில்லை. மேலும், ஜனாதிபதியின் ஒப்புதலின் பெயரில் நீதிபதிகளை நியமிக்கும் ஒரே அரசாங்கம் இந்தியா மட்டுமே. இவ்வாறு அவர் பேசினார்.ஆகஸ்ட்டில் ஓய்வு* உச்ச நீதிமன்றத்தின் தற்போதைய தலைமை நீதிபதியாக இருக்கும் என்.வி.ரமணா வரும் ஆகஸ்ட் மாதம் 26ம் தேதி ஓய்வு பெறவுள்ளார். * அதே போன்று அமெரிக்காவின் உச்ச நீதிமன்ற நீதிபதி ஸ்டீபன் பிரேயர் (83) இந்த ஆண்டு கோடைக்காலத்தின் போது ஓய்வு பெறுகிறார். இதைத் தொடர்ந்து, அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் முதல் கறுப்பின பெண் நீதியாக கேதன்ஜி பிரவுன் ஜாக்சன் தேர்ந்தெடுக்க உள்ளார்.