ராம்நகர் : ”நீர் திட்டங்களால் லோக்சபாவில் எனக்கு ஏற்பட்ட அவமானம் இன்னும் மறக்கவில்லை,” என ம.ஜ.த.,வை சேர்ந்த முன்னாள் பிரதமர் தேவகவுடா, ‘ஜனதா ஜலதாரே’ மாநாட்டில் உருக்கத்துடன் பேசினார்.பா.ஜ., மற்றும் காங்கிரஸ் ஆகிய இரண்டு தேசிய கட்சிகள் தங்களுக்கே உரிய பாணியில், 2023ல் நடக்க உள்ள சட்டசபை தேர்தலுக்கு தயாராகின்றனர்.
இதற்கிடையில் மாநில கட்சியான ம.ஜ.த., நீர் பாசன திட்டங்களை முன் வைத்து, பிரசாரம் செய்ய திட்டம் தீட்டியிருந்தது. கொரோனா மூன்றாம் அலையில் ஜனவரியில் நடக்கவிருந்த ‘ஜனதா ஜலதாரே’ நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டது.தற்போது தொற்று பரவல் குறைந்ததால், ராம்நகர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில், அக்கட்சியை சேர்ந்த முன்னாள் பிரதமர் தேவகவுடா தலைமையில் ஜனதா ஜலதாரே மாநாடு நேற்று நடந்தது.மாநாட்டை துவக்கி வைத்து அவர் பேசியதாவது:இறுதி மூச்சு நான் கொடுத்த வாக்குறுதியை என்றுமே கை விட்டதில்லை. மாநில நீர் பாசன திட்டங்களுக்காக என் இறுதி மூச்சு நிற்கும் வரை போராடுவேன்.தேர்தலை கருத்தில் கொண்டு இந்த மாநாடு நடத்தவில்லை. ஒரு சொட்டு தண்ணீருக்காக போராடுகிறோம். விவசாயிகளை கை விட மாட்டோம்.நீர் பாசன திட்டங்களுக்காக எந்த கட்சி அழைத்தாலும் நான் சென்று போராடுவேன். என் ஆட்சி காலத்தில், பா.ஜ., காங்கிரஸ் அமைச்சர்கள் காவிரி விஷயத்தில் என்னுடன் கை கோர்க்கவில்லை.தமிழகத்துக்கு 9 டி.எம்.சி., தண்ணீர் விட்ட போது, எனக்கு எதிராக பேசினர். மற்றொரு புறம் குறைவாக விட்டதாக, தமிழகத்தின் 40 எம்.பி.,க்களும் எனக்கு எதிராக போராட்டம் நடத்தினர்.நீர் பாசன விஷயங்களில், லோக்சபாவில் எனக்கு ஏற்பட்ட அவமானம் இன்னும் மறக்கவில்லை. ஆனாலும் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். எனக்கு மூட்டு வலி உள்ளது. ஆனால் தலையில் உள்ள நீர் பாசன வலியை மறக்க முடியவே முடியாது.பெரிய நதிகள், துணை நதிகள், ஆறுகளை ஒன்றிணைத்து மாநில மக்களுக்கு தண்ணீர் வசதி ஏற்படுத்துவது ம.ஜ.த., நோக்கம். இதில் நான் அரசியல் செய்வதாக குற்றஞ்சாட்டுகின்றனர்.நீர் பாசன துறை அமைச்சராக இருந்த போது, கனகபுராவில் ஏரி அமைக்க உலக வங்கியிலிருந்து நிதி பெற அனுமதி பெற்றேன். இதே ராம்நகரில் வெற்றி பெற்று, முதல்வரானேன்.இந்த புண்ணிய தலத்திலிருந்து ஜலதாரே விழிப்புணர்வு வாகனங்களை துவக்கி வைத்திருப்பது எனக்கு கிடைத்த பாக்கியம். நம் நீர் பங்கிற்காக, நாங்கள் போராடுகிறோம். எங்களுக்கு சக்தி கொடுங்கள், எங்களுடன் கை கோருங்கள்.இவ்வாறு அவர் பேசினார்.
Advertisement