பங்கார்பேட்டை : பா.ஜ., – எம்.பி., அமைச்சர்கள், காங்கிரஸ் எம்.எல்.ஏ., – எம்.எல்.சி., பங்கேற்ற பங்கார்பேட்டை டவுன் சபை புதிய கட்டட திறப்பு விழாவில், கூச்சல், குழப்பம் நிலவியது. விழா முடியும் முன்பே பா.ஜ.,வினர் வெளியேறினர்.பங்கார்பேட்டையின் பூங்கா அருகில் 80 லட்சம் ரூபாய் செலவில் பங்கார்பேட்டை டவுன் சபை புதிய அலுவலகம் கட்டப்பட்டது.
2022 மார்ச்சில் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., நாராயணசாமி பூஜை செய்து திறந்து வைத்தார். இதற்கு பல தரப்பிலும் எதிர்ப்பு கிளம்பியது. ‘இது தனிநபர் சொத்து அல்ல. கர்நாடக அரசு நிதியுதவி மூலம் கட்டப்பட்டது; அரசியல் ஆதாயத்துக்காக தன்னிச்சையாக, நாராயணசாமி திறப்பு விழா நடத்தலாமா’ என, கோலார் பா.ஜ., – எம்.பி., முனிசாமி, கோலார் மாவட்ட பொறுப்பு அமைச்சர் முனிரத்னா உட்பட பலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.இதை தொடர்ந்து புதிய கட்டட திறப்பு விழா, நேற்று நடப்பதாக அரசு அறிவித்தது. இதற்காக, புதிய அலுவலகத்தின் அருகில் மேடை அமைக்கப்பட்டது. விழா குறித்து எம்.எல்.ஏ., நாராயணசாமிக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.நேற்றைய விழாவுக்கு கோலார் பா.ஜ., – எம்.பி., முனிசாமி, மாவட்ட பொறுப்பு அமைச்சர் முனிரத்னா, நகராட்சித்துறை அமைச்சர் நாகராஜ், காங்கிரஸ் எம்.எல்.சி., அனில்குமார் ஆகியோர் வந்திருந்தனர். அமைச்சர் நாகராஜ், புதிய கட்டடத்தை திறந்து வைத்தார்.தொடர்ந்து விழா மேடையில் தலைவர்கள் ஏறியதும், காங்கிரசாரும், தங்கள் கட்சி ஆதரவு கோஷங்களை எழுப்பினர்.அமைச்சர் நாகராஜ் பேசுகையில், ”ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகள் இணைந்து அரசு விழாவை கவுரவிப்பது தான் நல்ல கலாச்சாரம். அரசியலுக்கு நான் ஒன்றும் புதியவனல்ல. 20 ஆண்டுகளுக்கும் மேலாக நடவடிக்கைகளை கவனித்து வருகிறேன்,” என்றார்.அப்போது காங்கிரசார் பலத்த கோஷங்களை எழுப்பி, அவரை பேச விடாமல் தடுத்தனர்.இதை தொடர்ந்து, அமைச்சர் முனிரத்னா பேசுகையில், ”இது அரசு விழா; கவனத்தில் கொள்ள வேண்டும். தகராறு செய்ய அவசியம் என்ன. கட்டட திறப்பு விழா முடிந்தது. பிறகு ஏன் கூச்சல்,” என, கேள்வி எழுப்பினார்.அப்போது, தொண்டர்களிடையே தள்ளுமுள்ளு, கூச்சல் ஏற்பட்டது. எம்.பி., முனிசாமி பேச முற்பட்டபோது, அரசுக்கு எதிராக காங்கிரஸ் தொண்டர்கள் கோஷங்களை எழுப்பினர்.மேடையில், அமைச்சர் முனிரத்னா, காங்கிரஸ் எம்.எல்.ஏ., நாராயணசாமியை கடுமையாக எச்சரித்தார். ”பல தகராறுகளை பார்த்தவன் தான். சட்டம் – ஒழுங்கு சீர்க்குலைய கூடாதென அமைதியாக இருக்கிறேன்,” என கூறியவாறு, மேடையை விட்டு இறங்கினார். இதை தொடர்ந்து பா.ஜ., தலைவர்கள் அனைவருமே இறங்கினர்.இதன் பின் நாராயணசாமி எம்.எல்.ஏ., பேசுகையில், ”கர்நாடகாவில் நடப்பது மக்கள் அரசு அல்ல. பெரிய ஊழல் அரசு. ஜனநாயகத்துக்கு மதிப்பளிக்காத அரசு,” என்றார்.இவ்வாறு கடும் கூச்சல், குழப்பத்திற்கு இடையே நடந்த விழாவில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
Advertisement