பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் இம்ரான் கான் அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றி பெற்றது. இதனால், இம்ரான் கான் அரசு கவிழ்ந்து, பாகிஸ்தான் பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து, எதிர்க்கட்சித் தலைவரான ஷாபாஸ் ஷெரீப் பாகிஸ்தானின் புதிய பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்த நிலையில், பாகிஸ்தானின் புதிய பிரதமருக்கு இந்தியப் பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், “பாகிஸ்தான் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஷபாஸ் ஷெரீப்-க்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். பயங்கரவாதம் இல்லாத, அமைதியான நிலைத்தன்மை கொண்ட நாட்டை இந்தியா விரும்புகிறது. ஆகையால், நமது வளர்ச்சிக்கான சவால்களைக் கவனத்தில் கொண்டு, நமது மக்களின் நல்வாழ்வு மற்றும் வளமான வளர்ச்சியை உறுதிப்படுத்துவோம்” என வாழ்த்து தெரிவித்திருந்தார்.
பிரதமர் மோடியின் வாழ்த்துக்குப் பதில் அளிக்கும் விதமாக ஷாபாஸ் ஷெரீப்,“இந்தியப் பிரதமர் மோடிக்கு நன்றி. எங்கள் நாடு இந்தியாவுடன் அமைதியான மற்றும் கூட்டுறவு உறவுகளை விரும்புகிறது” என்று கூறியுள்ளார். மேலும், ஷாபாஸ் ஷெரீப் பதவியேற்றதும் சட்டமன்றத்தின் தனது முதல் உரையில் “நாங்கள் இந்தியாவுடன் நல்ல உறவுகளை விரும்புகிறோம். ஆனால் காஷ்மீர் பிரச்னை தீர்க்கப்படும் வரை நீடித்த அமைதி சாத்தியமில்லை” என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.